இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினின் அழைப்பின் பேரில் அவர் ஆகஸ்ட் 26 வரை அங்கு தங்கியிருப்பார்.

இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சாதிப்பில் விவாதிக்கப்பட உள்ளது.

இது தவிர, அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான உதவியாளர் ஜேக் சுல்வினையும் பாதுகாப்பு அமைச்சர் சந்திக்கவுள்ளார்.

பிரதமர் மோடியின் நியூயார்க் பயணத்திற்கு முன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது இந்திய-அமெரிக்க உறவுகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். மேலும், பாதுகாப்புத் துறையில் பல ஒத்துழைப்புகள் பலப்படுத்தப்படும். இது தவிர, அமெரிக்க பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்க பாதுகாப்பு துறையினருடன் ஒரு வட்ட மேசை சந்திப்பையும் நடத்துவார். இதில், பாதுகாப்பு துறையுடன் நடந்து வரும் பணிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்திற்கு ஜிஇ-எஃப்404 டர்போஃபன் என்ஜின்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் தனது பயணத்தின் போது அமெரிக்க அதிகாரிகளிடம் எழுப்புவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ஜின்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்திய விமானப்படைக்கு தேஜாஸ் எம்கே1ஏ டெலிவரி நிலுவையில் உள்ளது. முதல் தேஜாஸ் Mk1A மார்ச் 31, 2024 க்குள் இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட இருந்தது, ஆனால் அது சுமார் 10 மாதங்கள் தாமதமாகிறது.

பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினுடன் ராஜ்நாத் சிங், இது குறித்து ஆலோசித்து, இன்ஜின்கள் வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைப்பார். இந்த பயணத்தின் போது, ​​உயர் தொழில்நுட்ப துறைகளில் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது

மேலும், இந்த பயணத்தின் போது இந்திய சமூகத்தினருடனும் ராஜ்நாத் சிங் உரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.