இணைச் செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் பதவிகளுக்கு பக்கவாட்டு நுழைவு மூலம் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான சர்ச்சையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

லேட்டிரல் என்ட்ரிக்கான இந்த ஆட்சேர்ப்பு விளம்பரத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசு யுபிஏசிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவைத் தொடர்ந்து, டிஓபிடி அமைச்சர் ஜிதேந்திர சிங், யுபிஎஸ்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், பக்கவாட்டு நுழைவு விளம்பரத்தை ரத்து செய்ய வேண்டும் என, அமைச்சர் ஜிதேந்திர சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

பக்கவாட்டு நுழைவு மூலம் இணைச் செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் ஆகிய 45 பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்டது.

இந்த விளம்பரம் வெளியானதில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது இடஒதுக்கீட்டிற்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்று குரல்கொடுத்தன.

இதன் மூலம் ஐஏஎஸ் பதவிகளில் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க அரசு விரும்புகிறது என்று காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மத்திய அரசை தாக்கினார்.

இந்த நிலையில் மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி ஆட்சேர்ப்பு விளம்பரத்தை திரும்பப்பெறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.