சென்னை: ‘சென்னை மாநகராட்சி சேவைகளை கண்காணிக்க டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சேவைகளை கண்காணிக்கவும், பேரிடர் நிவாரண பணிகளிலும் டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணியில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மற்ற பணிகளையும் கண்காணிக்க டிரோன் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இன்றைய காலக்கட்டம் டிஜிட்டல் மயமாகி வருவதால், அதற்கேற்றார்போல பணிகளையும் முறைப்படுத்துவதில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், டிரோன்களை மாநகராட்சியின் பல்வேறு சேவைகளை கண்காணிக்கவும், மாநகராட்சியின் சேவைகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கடற்கரை கண்காணிப்பு, கால்வாய்கள் தூர் வாருதலை கண்காணித்தல், நிவாரண பணிகள், பேரிடர் காலங்களில் குறிப்பிட்ட பகுதிக்கு மருந்துகளை கொண்டு செல்வது, மனிதர்களால் செல்ல முடியாத பகுதிகள் குறித்த வரைபடங்களை உருவாக்குவது, குப்பை கொட்டும் இடங்களை கண்காணிப்பது போன்ற பணிகளை டிரோன்கள் மூலம் மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. அதற்காக டிரோன் இயக்குவோரை நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது,” என பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாக திருமண விழா மட்டுமின்றி, பல்வேறு துறைகள் மற்றும் நிகழ்வுகளில் டிரோன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. ராணுவம், வேளாண்மை, உள்ளாட்சி அமைப்பு, மருத்துவம், திரைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளில் டிரோன்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன இதைத் தொடர்ந்து சேவைகளை கண்காணிக்கும் பணியிலும் டிரோன்களை உபயோகப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.