உலக சந்தையில் சீனா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் கருவிகளும் இப்போது போட்டிபோட்டு வலம்வருகிறது.

ஓவன்கள், அதிக திறன் கொண்ட மிக்ஸர், நொறுக்குத் தீனி தயாரிக்கும் எந்திரங்கள் என பல்வேறு சமையல் கருவிகள் எந்திரங்களை உலகத் தரத்தில் உள்ளூர் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

கோவை, சென்னை மட்டுமன்றி மதுரை, திருச்சி, திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1200 தொழிற்சாலைகள் சமையல் எந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதில் கோவை மற்றும் சென்னையில் மட்டுமே 400 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் பணியாற்றும் பொறியாளர்கள் உலகத் தரத்துக்கு சவால் விடும் வகையில் பல்வேறு எந்திரங்களை தாயரித்து வருகின்றனர்.

6, 12, 20 தட்டுகளைக் கொண்ட வெவ்வேறு ஓவன்கள் மட்டுமன்றி ஒரு தட்டில் பிரியாணி, ஒரு தட்டில் பேக்கரி ஐட்டம், மற்றொரு தட்டில் மீன் உணவு என ஒரே சமயத்தில் பல்வேறு சுவையான உணவுகளை அதன் சுவை மற்றும் மனம் மாறாமல் தயாரிக்க உதவும் உபகரணங்களை உருவாக்கியுள்ளனர்.

ஓவன் தயாரிப்பில் உலகின் நெம்பர் 1 ஆக விளங்கும் ஜெர்மன் நிறுவனங்கள் கூட தமிழ்நாட்டில் தயாராகும் இந்த வகை ஓவன்களை கண்டு வியந்துபோயுள்ளனர்.

மேலும், தென்னிதியாவிலேயே மிகப்பெரிய உணவு தயாரிப்பு கூடமாக விளங்கக்கூடிய ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை கேன்டீனில் நாள்தோறும் சுமார் 45000 பேருக்கு உணவு தயாரிக்கும் வகையில் பல்வேறு வடிவிலான மெகா இயந்திரங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தவிர, கடலைமிட்டாய் முதல் மிக்ஸர், முறுக்கு தாயாருக்கும் இயந்திரங்களை உருவாக்கி வந்த தொழிற்சாலைகள் தற்போது பர்கர், பிரெஞ்சு ப்ரைஸ் என வெளிநாட்டு உணவுவகைகள் மற்றும் நொறுக்கு தீனிகளை தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்கி வருகின்றன.

தமிழ்நாட்டு பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் திறனை கண்டு வியந்த வெளிநாட்டு சமையல் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீட் அண்ட் கண்ட்ரோல் இப்போது சென்னையை அடுத்த மஹிந்திரா சிட்டியில் அதன் தொழிற்சாலையை அமைத்துள்ளதுடன் அதை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் இண்டக்சன் வகை குக்கிங் உபகரணங்களின் தயாரிப்பு செலவு அதிகமாவதை கருத்தில் கொண்டு பல ஐரோப்பிய நிறுவனங்கள் தமிழ்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து அவற்றை கொள்முதல் செய்கின்றன.

இதனால் உலக சந்தையில் சமையல் உபகரணங்கள் தயாரிப்பில் தமிழ்நாடு போட்டிபோட்டு முன்னேறிவருவதை அடுத்து இந்த நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து தரவேண்டும் என்று இத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.