மத்திய அரசுத் துறை உயர்பதவிகளில் லேட்டிரல் என்ட்ரி மூலம் அதிகாரிகளை நேரடி நியமனம் செய்வதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் அழைப்புவிடுத்துள்ளார்.

45 இணை செயலர், இயக்குனர்கள், துணை செயலர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்க மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.

ஐ.ஏ.எஸ். போன்ற மத்திய சேவை அதிகாரிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்த இந்த பதவிகளுக்கு தற்போது நேரடி நியமனம் மூலம் தேர்வு நடைபெற உள்ளதாக வெளியான அறிவிப்பு பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 2018 முதல் இதுபோன்ற நேரடி நியமனங்கள் பல்வேறு துறைகளில் நடைபெற்று வந்தபோதும் தற்போது ஒரேகட்டமாக 45 அதிகாரிகள் துணை மற்றும் இணை செயலாளர்கள் பொறுப்பில் தேர்வு செய்ய இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

தங்கள் கொள்கைகளுடன் இணக்கமாக செல்பவர்களை பின்வாசல் வழியாக அரசின் உயர் பதவிகளில் அமர்த்தும் பா.ஜ.,வின் சதியே இந்த அறிவிப்பு.

அரசு துறைகளின் உயர் பதவிகளில் இப்படி நேரடியான நியமனங்கள் நடந்தால், இன்றைய அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உயர் பதவிகளை அடைவதற்கான வழி மூடப்பட்டுவிடும்.

சாமானியர்களுக்கு குமாஸ்தா மற்றும் பியூன் வேலை மட்டுமே மிச்சமிருக்கும். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டை பறிக்கும் மிகப்பெரிய சதி இது.

பா.ஜ., அரசு இந்த அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.