பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளை மூடிவிட்டு டெபாசிட்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்டு அரசுத் துறைகளுக்கு கர்நாடக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாநில அரசின் இந்த உத்தரவால் வங்கி பரிவர்த்தனை வெகுவாக பாதிக்கப்படும் என்ற அச்சகத்தை தொடர்ந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வுகாண பஞ்சாப் நேஷனல் வங்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் அறிவுறுத்தலின் பேரில் நிதித்துறை செயலாளர் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பில் மேற்படி வங்கிகளில் இனி எந்தவிதமான டெபாசிட்களும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
14-9-2021 தேதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி, ராஜாஜிநகர் கிளையில் கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் ரூ. 25 கோடிக்கான ஓராண்டு வைப்பு நிதியை செலுத்தியது.
அதற்காக ரூ. 13 கோடி மற்றும் ரூ. 12 கோடி என இரண்டு தனித்தனி ரசீதுகளை அந்த வங்கி வழங்கியுள்ளது.
இதில் ரூ. 13 கோடிக்கான தொகை முதிர்வு தேதிக்குப் பின் கர்நாடக அரசு வாரியத்தின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது.
ஆனால், ரூ. 12 கோடிக்கான டெபாசிட் தொகையை வங்கி அதிகாரிகள் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது, மேலும், இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
அதேபோல் கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அப்போதைய ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், அவென்யூ ரோடு, பெங்களூரு வங்கியில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 10 கோடியை ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துள்ளது.
ஆனால், இந்த தொகை முதிர்வு தேதிக்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கடனாக அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.பி.ஐ. மற்றும் பி.என்.பி. வங்கிகளின் இந்த முறையற்ற நடவடிக்கைக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளதை அடுத்து அந்த வங்கிகளில் உள்ள கணக்குகளை முடக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
இதனையடுத்து மாநில அரசுத் துறைகள், பொது நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் வைப்புத் தொகைகளை உடனடியாக திரும்பப் பெறுவும் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள கணக்குகளை மூடுவும் தவிர இந்த வங்கிகளில் எந்த வகையான முதலீடும் செய்யக்கூடாது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்காக செப்டம்பர் 20ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ள நிலையில் இதுதொடர்பாக அரசுத் துறைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.