கடலூர்
ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் அதிக ஒலி எழுப்பியதால் இயக்குநர் சேரன் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
தினசரி கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டு முதல் மூன்று நிமிட இடைவெளியில் அதிக பேருந்துகள் இயக்கப்படுவதால், பேருந்து ஓட்டுநர்கள் ஏர் ஹாரன் பயன்படுத்தி அதிக ஒலி எழுப்பி அதிவேகமாக மற்ற வாகனங்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக தினசரி பேருந்துகளை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
நேற்று புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தபோது பேருந்துக்கு முன்னால் நடிகரும் இயக்குனருமான சேரன் காரில் சென்று கொண்டிருந்தார். கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் அதிக அளவு சத்தத்துடன் ஒலி எழுப்பிக் கொண்டே வந்ததார்.
சேரன் இதனால் ஆத்திரமடைந்து நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதிக ஒலி எழுப்பிய பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒதுங்குவதற்கும், வழி விடுவதற்கும் இடமில்லாத இடத்தில் தொடர்ந்து இவ்வாறு சக வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக பேருந்துகளை இயக்கும் பேருந்துகள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.