சென்னை: பெரும்பாலான வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ள சவுக்கு சங்கர், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக அரசுக்கு எதிராக செயல்பட்ட பிரபல யுடியூபர் சவுக்கு சங்கரை பல்வேறு வழக்குகளில் தமிழ்நாடு அரசு கைது செய்து நடவடிக்கை எடுத்தது. மேலும், அவர்மீது குண்டம் சட்டமும் போடப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றங்கள், அவருக்கு ஜாமின் வழங்கிய நிலையில் குண்டர் சட்டத்தையும் உயர்நீதி மன்றம் ரத்து செய்ததுடன், தமிழ்நாடு அரசையும், காவல்துறையும் கடுமையாக விமர்சனம் செய்தது.
சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஆரோக்கியமானது என்றும், மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர்மீது குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏவி, அவரை சிறையிலேயே வைத்திருத்துள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அண்மையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யபட்டது. அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.இந்நிலையில் இன்று சிவகங்கை கூடுதல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். பெண் காவலர்களை இழிவாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது மதகுபட்டி சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி தொடர்ந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சிவகங்கை கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, சிவகங்கையில் நீதிமன்றம் முன் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “சென்னையில் கார் பந்தயம் நடத்தி முடிக்கும் வரையில் நான் ஜெயிலை வெளியே வரக்கூடாது என உதயநிதி உத்தரவிட்டுள்ளார். அதனால்தான் நான் தினம் தினம் புதிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுவருகிறேன். என் மீதான எல்லா வழக்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்” என்றார்.
இதைத்தொடர்ந்து, தனக்கு எதிராக தமிழக அரசால் பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.