டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான நட்வர் சிங் காலமானார். இவர் ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரியாவார். இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் வழங்கி கவுரவித்து உள்ளது.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே நட்வர் சிங் காலமானார். அவருக்கு வயது 93. வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உடல்நலப் பாதிப்பு காரணமாக டெல்லி அருகே குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவரது இறுதிச்சடங்கு டெல்லியில் இன்று நடைபெற உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த 1931ஆம் ஆண்டுராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் பிறந்த நட்வர் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். 1984 ஆம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த நட்வர் சிங் அதே ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2004 – 2005 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். பாகிஸ்தானுக்கான இந்திய தூதராகவும் இவர் 1966-71 அம் ஆண்டு வரை பதவி வகித்தார். வெளியுறவுத்துறையில் 31 ஆண்டு காலம் நட்வர் சிங் பணியாற்றினார். ராஜஸ்தானின் பரத்பூர் தொகுதியில் இருந்து எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்ட நட்வர் சிங் 1985 ஆம் ஆண்டு மத்திய இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.