அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரும் 19ம் தேதிக்குப் பிறகு துணை முதல்வர் என்று அழைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தல் பிராச்சரத்தின் மூலம் தீவிர அரசியலில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

அதன்பிறகு 2022 டிசம்பரில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் சினிமாவிற்கு முழுக்குபோட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது இந்த தீவிர அரசியலைப் பார்த்து சீனியர்களே வாயடைத்து போயுள்ள நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்பிக்கள் உதயநிதி பெயரைச் சொல்லி பதவியேற்கும் நிலையில் சில ஆண்டுகளிலேயே உச்சத்திற்கு சென்றுவிட்டார்.

கட்சியின் கரைவேட்டிகள் எல்லாம் உச்சி முதல் பாதம் வரை உதயநிதி ஸ்டாலின் என்று சூடேறிப்போயுள்ள நிலையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

அன்பில் மகேஷ் தொடங்கி பல அமைச்சர்கள் இதுகுறித்து பேசியதை அடுத்து முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது.

செய்தியாளர்களின் இந்தக் கேள்விக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் அந்த கோரிக்கை இன்னும் பழுக்கவில்லை என்று சூசகமாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் வரும் 19ம் தேதிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் என்று அழைக்கவேண்டும் என்று பேசியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் உதயநிதிக்கு துணை முதல்வர் குறித்து மூத்த அமைச்சர் தூபம் போட்டிருப்பதை அடுத்து முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன் இந்த கோரிக்கை பழுக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.