திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானோரை இரவு பகல் பாராமல் பல நூற்றுக்கணக்கான மக்களை  காப்பாற்றிய இந்திய ராணுவ குழு, அங்கு பணிகளை முடித்து விடை பெற்றது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து இந்திய ராணுவம், துணை ராணுவ படைகள், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டோர் மீட்பு-தேடுதல் பணியில் கடந்த ஒன்பது நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய  வயநாடு நிலச்சரிவு 400க்கும் மேற்பட்டோரை பலிவாங்கி உள்ளது. இன்னும் 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.  மீட்பு பணியில் இந்திய ராணுவம் இரவு பகல் பாராது அயராது உழைத்து, ஏராளமானோரை மீட்டு சாதனை படைத்துள்ளது.

குசென்னையில் பயிற்சி பெற்று ராணுவ பொறியாளராக பணியில் சேர்ந்த சீதா ஷெல்கே என்பவர் வயநாடு பகுதியில் சூரல்மலை பகுதியில் 144 ராணுவ வீரர்களுடன் 36 மணி நேரத்தில் இரும்பு பாலம் அமைத்து நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற மகத்தான சாதனை புரிந்தது பெரும் சாதனையாக போற்றப்படுகிறது. இதன்மூலமே, ஏராளமானோரை  உயிருடன் மீட்க முடிந்தது. நிலச்சரிவு நடந்து 8 நாட்களை கடந்துள்ளதால்  இனிமேல் யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

இரவு பகல் பாராமல் மீட்பு பணியில் தீவிரமாக ராணுவத்தினர் பங்காற்றினர். ஆற்றில் சிதைந்து கிடந்த மனித உடல்களை தேடி, தேடி கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சரியான உணவு கூட இல்லாமல் உழைத்த ராணுவத்தினரின் பங்கு மிகப்பெரியது. இந்தநிலையில் கடந்த 9 நாட்களாக மீட்பு பணியில் இருந்து ராணுவத்தினர் நேற்று மாலையோடு திரும்பி சென்றனர். தேசிய கீதம் பாடி வழியனுப்பி வைக்கப்பட்டது. அப்போது ராணுவத்தினர் கூறுகையில் நாங்கள் இந்த இடத்தை விட்டு சென்றாலும் எங்கள் இதயம் கேரள மக்களிட் விட்டு செல்வதாக நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

வழியனுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கேரள அமைச்சர் முகமது ரியாஸ், மீட்பு பணிக்காக இத்தனை நாட்களாக உடலும் உள்ளமுமாக இருந்த ராணுவத்தினர் எங்களை விட்டுச்செல்வது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். ராணுவம் தங்களது பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு ராணுவம் வந்த பிறகு ஒரு உயிர் கூட போகாமல் பார்த்துக்கொண்டதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து  மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினர் திருப்பி அனுப்பப்பட்டனர். ராணுவ அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். மீட்பு பணிகளில் ஈடுபட்டு திரும்பும் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு வாசிகள் கைத்தட்டி உற்சாகம் எழுப்பினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.