சென்னை: பொது இடங்களில் அல்லது நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும். சென்னையில் 6,310 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமான பணியின் போது வெளியேற்றப்பட்ட கட்டிட கழிவுகளை சாலையோரங்களில் , நீர்நிலைகளின் கரையோரங்களில், காலி இடங்களிலும் கொட்டிச் செல்வதாக புகார்கள் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகின்றன. மேலும், மழை பெய்யும்போது மழைநீருடன் சேர்ந்து சாலையில் கட்டிடக்கழிவுகள் தேங்கிவிடுவது, வடிகால்களில் மழைநீர் வெளியேற இடையூறாக அடைத்துக் கொள்வது போன்ற சிக்கல்களும் உள்ளன.
இந்நிலையில், இது போல நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கட்டிட கழிவுகளை கண்டறிந்து தீவிர தூய்மைப்பணி மேற்கொண்டு அகற்றிட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
சென்னையில் 6,310 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது : சென்னை மாநகராட்சி தகவல்!
இதன்படி, சென்னை முழுவதும் கடந்த பத்து நாட்களாக இரவு நேரங்களில் சுமார் 7,500 தூய்மைப் பணியாளர்கள் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களில் கடந்த பத்து நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப்பணியில் சுமார் 6,310 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர பொது இடங்களில் அல்லது நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ. 500 முதல் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.