கோவை: கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேயர் தேர்தல் தொடர்பாக திமுக கவுன்சிலர்களுக்கு திமுக தலைமை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் 29-வது வார்டு கவுன்சிலராக ரங்கநாயகி உள்ளார். இவரை திமுக தலைமை சார்பில் அங்கு சென்ற அமைச்சர்கள் கேஎன்.நேரு, முத்துசாமி ஆகியோர் மேயர் வேட்பாளராக அறிவித்தனர்.  முன்னதாக அவர்கள் மாநகர திமுக கவுன்சிலர்கள் கூட்டி விவாதித்தனர். இதில் மேலும் சிலர் மேயர் பதவிக்கு ஆசைப்பட்ட நிலையில்,  அவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர்கள்,   ரங்கநாயகியை  மேயர் தேர்தல் வேட்பாளராக தேர்வு செய்து அறிவித்தனர். தொடர்ந்து இன்று காலை திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், நெல்லை மேயர் தேர்தல் போன்று வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 11மணி அளவில் மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கின.  மேயர் பதவிக்கான போட்டியில் ரங்கநாயகி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இவர் கோவை மாநகராட்சியின் 7-வது மேயராக ரங்கநாயகி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்! “நெல்லை மாதிரி நடக்கக்கூடாது” என திமுக கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை…