டெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம் என  என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக மாணவர்கள் மற்றும் எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்களுக்கு  முதுநிலை நீட் தேர்வு மையம் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டில்  உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கள் எழுந்த நிலையில், அதை ஏற்று  தமிழகத்திலேயே எழுதலாம் என தேசிய தேர்வு வாரியம்  (NTA) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுக எம்.பி. வில்சன், அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தேர்வு மையங்களை மாற்றக் கோரி மனு அளித்ததை அடுத்து நடவடிக்கை. திருச்சி மருத்துவர்களுக்கு தற்போது திருச்சி , கரூரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எம்.டி, எம்.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான முதுகலை நீட் தேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் நீட் இளநிலை தேர்வு குளறுபடி காரணமாக, நீட் முதுநிலை தேர்வு திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.   இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட முதுகலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. மேலும், தேர்வு மையங்களின் எண்ணிக்கை முறைப்படுத்தப்படும் எனவும் முதல் முறையாக 2 ஷிஃப்ட்டுகளில் தேர்வு நடத்தப்படும் எனவும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத் தலைவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு  தேர்வு மைய ஒதுக்கீடு விவரம் ஜூலை 31ஆம் தேதி வெளியானது. அதில் தமிழ்நாடு மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஊரகப்பகுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்தது. இது மருத்துவர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக ஏராளமானோர் என்டிஏக்கு வினாக்களை எழுப்பியிருந்தனர். மேலும் தங்களக்கு சொந்த மாநிலத்தில் மையம் ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமிழக எம்.பி.க்களை சந்தித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து திமுக எம்.பிக்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கே மாற்ற வேண்டும் என மனு அளித்தனர். இதை ஏற்று தற்போது,  முதுநிலை நீட் தேர்வு மையங்களை மாற்றி தேசிய தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளது.

திருச்சி, அரியலூரைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு ஆந்திர மாநிலம் கர்னூலில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்களுக்கு கரூர் மற்றும் திருச்சியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.