வயநாட்டில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது தேசிய பேரிடர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
“வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
“எனது தந்தை இறந்தபோது இருந்த அதே வலியை இப்போது உணர்கிறேன் இங்குள்ள மக்கள் பலர் தங்கள் முழு குடும்பத்தையும் இழந்துள்ளனர், அவர்களிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை” என்று ராகுல் காந்தி மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.
நிவாரண முகாமில் குழந்தை ஒன்று காணப்பட்டது தனது அன்பிற்குரிய குடும்ப உறவுகளை இழந்து நிற்கும் அந்தக் குழந்தைக்கு அந்த நேரத்தில் என்ன சொல்வது என்று கூட எனக்கு தெரியவில்லை.
வயநாடுக்கு முழு நாடும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, வயநாட்டில் நிகழ்ந்துள்ளது மிகப்பெரிய சோக நிகழ்வு என்று கூறியுள்ளார்..
முன்னதாக நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மாலா சென்றடைந்த ராகுல் காந்தி மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். வயநாட்டில் மறுவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசு நிர்வாகத்தை ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
“இந்த சோகம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்று பிரியங்கா கூறினார். இதேபோன்ற ஒரு சம்பவம் ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த நிலையில் தனது இதயம் பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பதாகவும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.