பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்,  50 மீட்டர் ரைபிள் 3பி (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024  ஜூலை  26ம் தேதி  தொடங்கி ஆகஸ்டு 11ந்தேதி வரை நடைபெற்று வருகிறது.  இந்த போட்டிகளில்  இந்தியா வீரர்கள் 117 பேர் உள்பட  பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இன்ற 5வது நாளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல், பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில், ஸ்வப்னில் குசால் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் இறுதிப் போட்டியில், 451.4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் மற்றும் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 3வது பதக்கம் இதுவாகும். முன்னதாக, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவிலும், 10மீ கலப்பு இரட்டையர் பிரிவிலும் மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை போன்றே,  ஸ்வப்னில் குசாலும் முன்னதாக ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.