வயநாடு: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள், நிறுவனங்கள்  தாராளமாக நிதி வழங்க கேரள முதல்வர்  பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக வயநாடு மலைப் பகுதியில் உள்ள சூரல் மலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவில் பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 276 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில்  ராணுவத்தின்ர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர்,  மாநில காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும்  தன்னார்வலர்கள் உள்ளிட்டோர்  இன்று 3வது நாளாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, அவ்வப்போது ஏற்படும் மோசமான வானிலை மற்றும் மழை வெள்ளம்   காரணமாக மீட்புப் பணியில் இடையூறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.  நிலச்சரியில் சிக்கியுள்ள மேலும் 200க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, மீட்புப்பணிகளைத் தீவிரப்படுத்தப்பட வேண்டுமானால், ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்கள் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும், ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலமும் சேதமடைந்துள்ள காரணத்தால், மீட்புப்பணி சவாலாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. தற்போது சேதமடைந்த பாலம் உள்ள இடத்தில் தற்காலிக பெய்லி பாலத்தை ராணுவப் படையினர் தயார் செய்து வருகின்றனர். இந்த தற்காலிக பெய்லி பாலத்தின் கட்டமைப்பு மறுபுறம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன் தான் மீட்புப் பணியாளர்கள் பேரிடர் பகுதிக்குச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வயநாடு பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட  பேரிடர் ஏற்பட்ட இடத்திற்குப் பார்வையிட முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தலைமைச் செயலாளர் வேணு உள்ளிட்டோர் வருகை தர இருப்பதாகவும், அதுபோல, பிரதமர் மோடி மற்றும், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இன்று வயநாடு வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த   கேரள முதல்வர் பினராயி விஜயன்,  வயநாட்டில் மீட்பு, நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உணவு பொருட்களை கொண்டு செல்ல கடற்படை உதவி கோரப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் உட்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.

நிலச்சரிவில் சிக்கிய 1,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 225 பேர் மாயமாகி உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணிகள் உட்பட 8,017 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 57 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 30-ம் தேதி மாலைதான் சிவப்பு எச்சரிக்கை தரப்பட்டது. வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரணத்துக்காக கேரள மாநில அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம், முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது. நிவாரண பணிகள் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மக்கள் தாராளமாக வழங்கவேண்டும். பணமாக அளிப்பவர்கள், கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பொருளாக அளிப்பவர்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பயன்படுத்திய பழைய பொருட்களை தரவேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.