வயநாடு:  பெரும் நிலச்சரி ஏற்பட்டு 143 பேரை பலிகொண்டுள்ள வயநாடு பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனால், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற செல்லவிருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தங்களது வயநாடு பயணத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர்கள் இன்று  (ஜூலை 31) பார்வையிட  செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி  காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேரள எம்.பிக்கள் கேசி வேணுகோபால்,  இடி முகமது பஷீர், எம்.கே ராகவன் ஆகியோர்   வயநாடு செல்ல இருந்தனர். ஆனால், அங்கு நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் கடும் மழை காரணமாக அவர்களது பயணம்ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

வயநாடு பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட  நிலச்சரிவில். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. சூரல்மலா கிராமத்தில் உள்ள 200 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும் தகவல். முண்டக்கை டவுன் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அட்டமலை கிராமத்தில், சாலியாற்றில் சடலங்கள் மிதந்து வருவதாக கிராம மக்கள் தகவல். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து சென்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் வயநாடு பகுதியில் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டு கோழிக்கோட்டில் தரையறுக்கப்பட்டுள்ளது.  சாலை மார்க்கமாக மீட்பு பணியினர் குழுவினர் வயநாட்டிற்கு பயணம் செய்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பேரிடர் மீட்பு படைகளுடன் பல மாநிலங்களைச் சேர்ந்த மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவமும்  நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவம், விமானப்படை இணைந்து தீவிரமாக மீட்டு வருகின்றனர். இரவு பகல் பாராமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே உடல்கள் சிதறி கிடக்கின்றன. அவைகள் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரளாவில் கட்டட வேலைக்கு சென்ற தமிழகத்தின் கூடலூர், புளியம்பாறையை சேர்ந்த காளிதாஸ் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த கல்யாணகுமார் என்பவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து கேரளாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால், இன்று  11 மாவட்டங்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில்  வயநாடு நிலச்சரிவில்  உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி  ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபாய் 2 லட்சம் நிதி  அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறிய மாநில முதல்வர் பினராயி விஜயன்,  “வயநாடு நிலச்சரிவு சம்பவம் நம் நாடு இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு. நேற்று மிகக் கடுமையான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 2 மணிக்கும், 4.10 மணிக்கும்  என 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 143 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் இதன் எண்ணிக்கை மாறலாம்.  வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு 128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு தூங்கச் சென்ற பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்னும் பலரின் உடல்கள் நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது. வயநாட்டில் 45 முகாம்களிலும், மாநிலம் முழுவதும் 118 முகாம்களிலும் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தீயணைப்பு படை, என்.டி.ஆர்.எப்., போலீசார் உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ராணுவம் மற்றும் கடற்படையின் பல்வேறு பிரிவுகள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.

பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்று, நாம் நமது ஆதரவை நல்க வேண்டிய நேரம்.” கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.