டெல்லி

ந்திய ரிசர்வ் வங்கி தொடங்கி 90 வருடங்கள் நிறைவடைவதையொட்டி ஒரு வெப் தொடரை வெளியிட உள்ளது.

கடந்த 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி அரசின் கருவூலம் ஆகும்.  ரிசர்வ் வங்கியே நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. மக்கள் மற்ற வங்கிகளை பயன்படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியை பயன்படுத்த முடியாது.

ஆனால் ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும், அனைத்து வங்கிகளையும் கண்காணித்து வருகிறது. தொடக்கத்தில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு இயங்கிய இவ்வங்கி 1937-ம் ஆண்டு முதல் மும்பையை தலைமையகமாக கொண்டுள்ளது. தற்போது ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 கிளைகள் உள்ளன.

கடந்த 1935-ல் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் 90 ஆண்டுகளை நிறைவு செய்தது. எனவே ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் வகையில், அதன் பயணத்தைப் பற்றிய விரிவான காட்சியை வழங்க ஐந்து எபிசோடுகளை கொண்ட வெப் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதன் ஒவ்வொரு எபிசோடும் 25-30 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும். வெப் தொடர் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொடர் தேசிய தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஓ.டி.டி. தளங்களில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.