சென்னை

பாசனத்துக்ககா மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை  கல்வாய்களில் நீர் திறக்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

“மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் T.M.செல்வகணபதியிடமும், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரனிடமும், விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை பரிசீலித்தப் பின் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு 30.07.2024 முதல் நீர் திறந்து விட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் முறையே 27000 ஏக்கரும், 18000 ஏக்கரும் ஆக மொத்தம் 45000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. இவற்றில் சேலம் மாவட்டத்தில் 16443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரை கேட்டுக் கொண்டுள்ளதாலும், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடிக்கு மேல் உள்ளதாலும், 2024-2025-ம் பாசன ஆண்டில் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 30.07.2024 முதல் 13.12.2024 வரை 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.