சென்னை: வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான அறிக்கை  தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மழை காலத்தில் பெய்யும் மழையை சேமித்து வைக்க போதுமான வசதிகளை ஆட்சியாளர்கள் செய்யாததால், பெரும்பாலான மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.  காவிரி நீரும் இதுபோலத்தான் வீணாக கடலில் கடக்கிறது.  இதை தடுக்க அணைகளை கட்டி சேமிக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால்,  அதற்கான நடவடிக்கைளை தமிழ்நாடு அரசு இதுவரை எடுக்கவில்லை.

இந்த நிலையில்,  பருவமழை காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாக்கும் வகையில், சென்னையில் உள்ள ஏரிகளைச் சீரமைக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத்  என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார்  நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது,  ,சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பருவமழை காலங்களில் வீணாகும் நீரை அருகில் உள்ள ஏரிகளுக்குத் திருப்பி விட்டு ஏன் பாதுகாக்கக் கூடாது என அரசு வழக்கறிஞரிடம்  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர்,  தமிழநாட்டில்  நீர்வளத்துக்கு எனத் தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மழை காலத்தின்போது கிடைக்கம்  உபரி நீரைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  தமிழ்நாட்டின்  எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பருவமழை காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாப்பது குறித்த திட்டம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதுடன், அது சம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படியும்  உத்தரவிட்டனர்.

மேலும், மழை நீரை ஏரி குளங்களுக்குத் திருப்பி விடுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனக் கூறிய நீதிபதிகள், நீர்வளத் துறை உருவாக்கப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.