சென்னை: அம்மா உணவகங்களில் பழுதாகியுள்ள இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பாத்திரங்களை மாற்ற ரூ7.6 கோடி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், தொழில் வரி 35 சதவீதமாக உயர்த்தவும், சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கான உரிமம் உயர்வு, கடைகளுக்கான உரிமை கட்டணம் உயர்வு உள்பட பல்வேற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார் அவர்கள், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவற்றை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் இன்றைய மாமன்ற கூட்டத்தில், அம்மா உணவகங்களில் உள்ள பாத்திரங்களை மாற்ற ரூ7.6 கோடி ஒதுக்கீடு! சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னையில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்படும் மாடு ஒன்றுக்கு அபராத தொகையாக ரூ.5000 வசூலிக்கப்படுகிறது. இத்தொகையை ரூபாய் 10,000 ஆக உயர்த்தவும், மூன்றாம் நாள் முதல் தினமும் ரூபாய் ஆயிரம் பராமரிப்பு செலவாக கூடுதலாக வசூலிக்கவும், இரண்டாம் முறையாகப் பிடிக்கப்படும் மாடுகளுக்கு அபராதத் தொகையை ரூபாய் 15,000 என விதிக்கவும், பராமரிப்புச் செலவை மூன்றாம் நாள் முதல் தினமும் ரூ.1000 கூடுதலாக வசூலிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரையிலான 200 வார்டுகளிலும் மற்றும் ஏழு அரசு மருத்துவமனைகளிலும் தற்போது 390 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அம்மா உணவகங்களில் பாத்திரங்களை பழுது நீக்கவும், இயந்திரங்களைச் சீர் செய்யவும், பழுது நீக்கம் செய்ய இயலாத பாத்திரங்கள் மற்றும் இயந்திரங்களை மாற்றம் செய்யவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவற்றையும் சேர்த்து மொத்தம் 70க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.