டெல்லி: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மீட்புபணிகளில் ஈடுபட காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
தென்மேற்க பருவமழை காரணமாக கேரளத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக வயநாடு மலைப் பிரதேசங்களில் கடுமையான மழை கொட்டி வரும் நிலையில், நேற்று இரவு வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சிக்கி உடைந்து நொறுங்கி உள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளவர்களை மீட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சுமார் 10/0க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வயநாடு முன்னாள் எம்.பி.யும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த அசம்பாவிதத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசி, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக உறுதியளித்தார். அனைத்து ஏஜென்சிகளுடனும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை எங்களுக்குத் தெரிவிக்கவும் நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்.
மத்திய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு அனைத்து UDF ஊழியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறி உள்ளார்.