திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்  தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு பகுதியில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் முக்கிய பாலமும் உடைந்துள்ளது. இந்த நிலச்சரிவில்  1000க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிக்கும் நிலையில், 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்.

இரு ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபட உள்ளது. முண்டகை மற்றும் அட்ட மலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளதாகவும்  கேரள மாநில அமைச்சர் தெரிவித்துள்ளது.  இது குறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன்   பிரதீப் ஜான், கேரள மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு  அதீத மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், ” கண்ணூர் , கோழிக்கோடு, திரிசூர், ஆகிய பகுதிகளில் இன்று அடர்ந்த மேகங்கள் பதிவாகியுள்ளன. இதனால் இன்றும் இப்பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வட கேரளா மற்றும் மத்திய கேரளா பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,   பொதுவாக 200மிமீ கடந்து மழை பெய்தால் அதனை ரெட் அலெர்ட் என்று குறிப்பிடுகிறோம். ஆனால் சில மாவட்டங்களில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் அதனையும் தாண்டி 300மிமீ மழை பெய்தது. இதேபோல இன்றும் 300மிமீ மழை பெய்யுமா என தெரியவில்லை ஆனால் கனமழை நீடிக்கும்.

மேற்கு திசைக் காற்றின் தீவிரம் காரணமாக மலை கிராமங்கள் மட்டுமல்லாது நகரங்களிலும் கனமழைக்கு இன்று வாய்ப்புள்ளது. ஏற்கெனவே கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மட்டும் 300மிமீ அளவு அதிகனமழை பெய்ததால் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து அவை நிலச்சரிவுக்கு வழிவகுத்துள்ளது அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 1க்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது” என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.