திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் முக்கிய பாலம் உடைந்தது. மேலும், நிலச்சரிவில்  100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், இதுவரை 19 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வளியாகி உள்ளது.  நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கனமழைகொட்டி வருகிறது. நீர்நிலைகள் நிரம்பிய நிலையில்,  மலைப்பகுதிகள் உள்ள  கடும் மழை காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகீறது.

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இரு ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல மீட்புப் பணியாளர்கள் உதவுகிறார்கள்.

முண்டகை மற்றும் அட்ட மலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளதாகவும் வருவாய் துறை அமைச்சர் கே ராஜன் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு, மாநில வனத்துறை அமைச்சர் ஏ கே சசீந்திரன்  கூறுகையில், “நிலைமை தீவிரமாக உள்ளது. அரசு அனைத்து நிறுவனங்களையும் மீட்க அழுத்தம் கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை அருகிலுள்ள நகரமான சூரல்மாலாவுடன் இணைக்கும் மாவட்டத்தில் உள்ள பாலம் அழிக்கப்பட்டதை அடுத்து, தற்காலிக பாலம் அமைப்பதற்கு இராணுவம் கயிற்றில் ஈடுபட்டு வருகிறதுர என்று கூறினார்.

இந்த நிலச்சரிவில்,  நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்றும், ஒரு குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

இப்பகுதியில் குறைந்தது மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒருவர்  தெரிவித்துள்ளார்.  நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்திய விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் இணைய இணைப்பு இல்லாததால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூத்த அதிகாரி மொஹ்சென் ஷாஹெடி தெரிவித்தார்.

வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.