அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கிருஷ்ண பரமராஜன் எனும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். வரதராஜப்பெருமாளின் சிறந்த பக்தரான இவர், ஒருசமயம் தாமிரபரணியிலுள்ள பத்மநாபதீர்த்தத்தில் (குறுக்குத் துறை) குளித்துக்கொண்டிருந்த போது நீலநிறக் கல்லால் ஆன பெருமாள் சிலை கிடைத்தது. அதைத் தனியே கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்தார். வரதராஜப் பெருமாள் என திருநாமம் சூட்டினார்.

ஒருமுறை எதிரி நாட்டு அரசர், கிருஷ்ணராஜ மன்னர் மீது போர் தொடுத்து வந்தார். சிலை கிடைத்த பிறகு பெருமாள் வழிபாட்டில் மட்டுமே கவனம் செலுத்தியதால், போரில் எதிரி மன்னரை எதிர்த்துப் போரிடத் தக்க படைபலமின்றி இருந்தார். தனது நாட்டு மக்களைக்காத்து அருள்புரிந்திடும்படி பெருமாளிடம் மனம் உருகி முறையிட்டார். அவரது முறையீட்டிற்கு செவிசாய்த்த பெருமாள், மன்னர் வேடத்தில் போர்க்களத்திற்கு சென்று எதிரிநாட்டுப் படை வீரர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றார். இவ்வாறு, மன்னருக்காக போர்க்களத்தில் வீரத்தளபதியாக அவதரித்து வந்த பெருமாளே இவ்விடத்தில் மூலவராக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

ஒருமுறை வீரராகவரின் பக்தர் ஒருவர் தாமிரபரணி ஆற்றில் தனது மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்துவிட்டு நீராடி, சுவாமியைத் தரிசனம் செய்ய வந்தார். அப்போது சுவாமியை நேரடியாக தரிசனம் செய்யவேண்டுமென அதீத ஆவல் எழுந்தது. பெருமாளோ வரவில்லை. எனவே, உண்ணாவிரதம் இருந்தார். ஒருநாள் சுவாமிக்கு உச்சிகாலை பூஜை நடந்து கொண்டிருந்தது. பக்தர் மயக்க நிலைக்குச் செல்ல இருந்த நிலையில், அவரது பக்திப்பெருக்கில் அகம் மகிழ்ந்த சுவாமி அவருக்கு காட்சி தந்து அருள்புரிந்தாராம். இவ்வாறு, பக்தனின் வேண்டுதலுக்கு இரங்குபவராக இத்தலத்தில் பெருமாள் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

இத்தலத்தில் அருள்புரியும் வீரராகவர், நின்றகோலத்தில் காண்போரை வசீகரிக்கும் கோலத்தில் சிரித்த முகமாக காட்சி தருகிறார். அவருக்கு இடது முன்புறம் அஞ்சலி ஹஸ்த கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

சுற்றுப்பிரகாரத்தில் சுதர்சனர், மஹாலட்சுமி, பூமாதேவி, கிருஷ்ணர், விஷ்வக்ஸேனர், ஆழ்வார்கள் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருந்து அருள்புரிகின்றனர்.

திருவிழா:

சித்திரையில் 10 நாள் திருவிழா, வைகாசியில் வருடாபிஷேகம், ஆடி உற்சவம், ஓணம், கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் ஊஞ்சல் உற்சவம், திருக்கார்த்திகை தீபம், தை வெள்ளி, இராமநவமி.

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்