சென்னை: கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் குத்தகைக்கு கால வரம்பை நிா்ணயிக்க வேண்டும் என்றும்,  அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவில் நிலங்கள், ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் திருட்டுத்தமான விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு வரவேண்டி வருமானங்கள் குறைக்கின்றன. இந்த நிலையில்,  தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா்  நீதிபதி குமரேஷ்பாபு அமா்வில்   விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில், ‘கோயில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் நிலம் உள்ளது. அவற்றை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலங்கள் குறித்த அனைத்து தகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விவசாய நிலங்களைப் பொருத்தவரை குத்தகைக் காலம் முடிந்ததும், அவற்றை மீட்டு, மீண்டும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு குத்தகைக்கு விடப்படுகிறது’ என விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘குத்தகை காலம் முடிந்த பின் குறிப்பிட்ட காலத்துக்குள் நிலத்தை மீட்டு, மீண்டும் குத்தகைக்கு வழங்குவதற்கு கால வரம்பை நிா்ணயிக்க வேண்டும்’ என அறிவுறுத்திய நீதிபதிகள், கோயில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனா்.