சென்னை: சிறுபான்மையினா் நல ஆணையம் தலைவராக இருந்து வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நீக்கப்பட்டு, புதிய தலைவராக பாதிரியாா் ஜோ அருண் நியமனம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணையத்தை மாற்றியமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய தலைவராக பாதிரியாா் ஜோ அருண் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் முதன்மைச் செயலா் விஜயராஜ்குமாா் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவா், உறுப்பினா்களின் பதவிக் காலம் முடிந்ததும், ஆணையம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது புதிய தலைவா், உறுப்பினா்களைக் கொண்ட தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய தலைவராக பாதிரியாா் ஜோ அருண் நியமிக்கப்படுகிறாா். அப்துல் குத்தூஸ் என்ற இறையன்பன் குத்தூஸ் உறுப்பினா் மற்றும் துணைத் தலைவராக இருப்பாா். ஹேமில்டன் வெல்சன், சொா்ணராஜ், நாகூா் நஜிமுதீன், பிரவின்குமாா் தத்யா, ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூா், முகமது ரபி, வசந்த் ஆகியோா் உறுப்பினராக இருப்பா்.  இந்த ஆணையத்தின் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் 3 ஆண்டுகள் வரை பதவி வகிப்பா் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணையத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக பீட்டா் அல்போன்ஸ் பதவி வகித்து வந்த நிலையில், அவரே மீண்டும் தலைவராக தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், அவர் மாற்றப்பட்டு உள்ளார்.