டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பிரதமர் மோடி, பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த அனைத்து உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நாடு வளர்ச்சியை எட்ட அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து அவை தொடங்கியதும் முதலில் நீட் விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், காங்கிரஸ் உள்ப எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எபப்பினர். ராகுல்காந்தி உள்பட பலர் கேள்விகளை எழுப்பியதுடன், மத்தியஅரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். ராகுல்பேசும்போது, இந்தியாவில் தேசிய தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாகவும், பணம் இருந்தால் அதை வாங்க முடிகிறது என்றும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, எம்.பி.க்களின் கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து, மக்களவையில், 2023-2024 பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  அத்துடன், 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான புள்ளி விவர அறிக்கையையும் தாக்கல் செய்தார். இதையடுத்து பொருளாதா ஆய்வறிக்கை நகல் அனைத்து எம்.பி.க்களுக்கும் வழங்கப்பட்டன.

 2023-2024 பொருளாதார ஆய்வறிக்கையின் படி சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகமாக இருந்தாலும், மொத்த பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது. பொருளாதார செயல்பாடு, பணவீக்கம், நிதிப்பற்றாக்குறை, வளர்ச்சி போக்கு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, 2025ம் நிதியாண்டில் உண்மையான ஜி.டி.பி. வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களவையை அடுத்து மாநிலங்களவையிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதைத்தொடர்ந்து  நாளை  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 7வது முறையாக  2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.