டெல்லி:  நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தேசிய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டிய நிலையில், மத்திய கல்விஅமைச்சர்  பிரதான் பதில் கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி,  நாட்டிற்கு எதிர்மறை எண்ணம் தேவையில்லை… கசப்பிலிருந்து விடுபடுங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றம் இன்று காலை தொடங்கியதும் வழக்கமான நடைமுறைகள் முடிந்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது முதலாவதாக நீட் தேர்வு குறித்த விவாதங்கள் தொடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நீட் தேர்வு குறித்த தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறுகையில், “நீட் தேர்வில் மட்டுமல்ல, அனைத்து முக்கியத் தேர்வுகளிலும் நமது தேர்வு முறையில் மிகக் கடுமையான சிக்கல் உள்ளது என்பது நாடு முழுவதும் தெரியும். அமைச்சர் (தர்மேந்திர பிரதான்) அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். அவரைத் தவிர, இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படைகள் அவருக்குப் புரியவில்லை என்று நான் நினைக்கவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய ராகுல்,  நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்று கவலையுடன் உள்ளனர், இந்தியாவின் தேர்வு முறை என்பதே மோசடியானது என்று அவர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். நீங்கள் பணக்காரராகவும் உங்களிடம் அதிக பணமும் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம் என்று மக்கள் தற்போது கருதுகின்றனர். அதையே எதிர்தரப்பில் உள்ள நாங்களும் கருதுகிறோம் என்று பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நீட் தேர்வு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய கல்விஅமைச்சர்  தர்மேந்திர பிரதான் பதில் கூறினார்.

அப்போது, ​​”…கடந்த 7 ஆண்டுகளில் தாள் கசிவுக்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இந்த (நீட்) விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. NTA க்குப் பிறகு  240க்கும் மேற்பட்ட தேர்வுகள் முழுப் பொறுப்புடன்  நடந்துள்ளன, அந்த தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பதை என்னால் கூற முடியும் என்றார்.

நீட் தேர்வில் 7 ஆண்டுகளாக வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.  5 கோடி மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நீட் தேர்வை எழுதி உள்ளனர். 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்ததற்காக எந்த ஆதாரமும் இல்லை.  4700 தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளது. * நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து முறையான விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

18வது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்த நிலையில், 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடியது. இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 அமர்வுகளுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மூன்றாவது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு எங்கள் அரசுக்கு திசையை காட்ட உள்ளது.

2047ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் நலன் கருதி அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும்.

ஏழை, விவசாயிகள், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம். மக்களின் வளர்ச்சிக்காக எவ்வளவு போராட முடியுமோ, அவ்வளவு போராடி சிறப்பான ஆட்சியை தருகிறோம். பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார். மேலும், “தேர்தல் பரப்புரை, போட்டி நிகழ்வுகள் என அனைத்தும் முடிந்து விட்டது. இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் மக்களுக்காக பாடுபட வேண்டும். எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும்” எனவும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதே சமயம் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நீட் விவகாரம், மூன்று குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஆகவே, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.