சென்னை: தமிழ்நாட்டின் தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின், பதவியேற்க இருப்பதபாக தகவல்கள் பரவி வருகின்றன. இது உண்மையா வதந்தியா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும்.

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, `துணை முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்!’ என்ற செய்தி, அவ்வப்போது பரவி வருகிறது. ஆனால், தற்போது பரவி வரும் செய்தி உண்மையானது என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2022 டிசம்பர் 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போதிருந்தே அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என்ற பேச்சு அவ்வப்போது எழுந்து வருகிறது. இந்த நிலையில், நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் முடிந்ததும்  தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை நடைபெறவில்லை.

இதற்கிடையில்,  தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு,  பிரச்சினை, ஆம்ஸ்ட்ராங் கொலை உள்பட பல்வேறு கொலை சம்பவங்களால்,   அரசு துறைகளின் செயலர்கள், இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில், முதலமைச்சர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) அமெரிக்கா செல்ல இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜூலை மாதம் அமெரிக்கா செல்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.  ஆனால், அரசு நிகழ்ச்சிகள், சுதந்திர தின விழா மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக, அவரது வெளிநாடு பயணம் ஒத்தி வைக்கப்பட்டு, ஆகஸ்டு மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் வகையில் முதல்வரின் பயண திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக,  தமிழக அமைச்சரவையிலும் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜனவரி மாதம் இதுபோன்ற ஒரு செய்தி ஊடகங்களில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால், துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்பட விருக்கிறார் என்ற செய்தி உண்மையல்ல, வதந்தி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுத்திருக்கிறார் .

இந்த நிலையில், தற்போது முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு, துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. திமுகவில்  துரைமுருகன் ள்பட எத்தனையோ மூத்த அமைச்சர்கள் உள்ள நிலையில், 2021ல் அரசியலுக்கு வந்த உதயநிதி துணைமுதல்வராவதால் சலசலப்புகளும் எழுந்துள்ளன.

அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிய உதயநிதி,  திரையுலகில் அதிகஆர்வம் காட்டி வந்தார். பல  திரைப்படங்களில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயன்ட் மூவிஸ்  என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.  பின்னர், திடீரென, கடந்த  2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து,  2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.  இதன் காரணமாக,  திமுக தலைமை, அவரை இளைஞர் அணி தலைவராக பதவி வழங்கி கவுரவித்தது. அதன்படி, 2019 சூலை 7 அன்று திமுக இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம் திமுகவின் வாரிசு அரசியல் உறுதியானது. இதற்கு கட்சி நிர்வாகிகளிடம் சலசலப்பு இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சிலர் மட்டுமே, “தி.மு.க-வில் உதயநிதியை விட்டால் வேறு யாரும் இல்லையா… தி.மு.க என்ன கருணாநிதியின் சொத்தா..?” என கடுமையக விமர்சித்தனர். பின்னர் அவர்களும், கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு வாயை மூடிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, பழம் தின்று கொட்டையை போட்ட மூத்த அமைச்சரான துரைமுருகன் உள்பட  பல மூத்த அமைச்சர்களும் உதயநிதியை வரவேற்க தயாராகினர். அவரை புகழ்ந்து பேசி தங்களது காரியங்களை சாதித்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்துதான்,  2021 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை அவரது குடும்பத்தினர்  (கருணாநிதி ஸ்டாலின் குடும்பம்) களமிறக்கினர்.  வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை யான,  திமுகவின் பாதுகாப்பான தொகுதிகளில் ஒன்றான சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.  இந்த தேர்தலின் போது நீட் விலக்கு  எய்ம்ஸ் செங்கல்  உள்பட பல்வேறு பொய்னான வாக்குறுதிகளை கொடுத்து திமுகவும் வெற்றி பெற்றது.

பின்ன்ர,  திமுக ஆட்சிக்கு வந்து, அவரது தந்தை மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு,  மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் பதவின. அதை உறுதி செய்யும் வகையில், உதயநிதி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அன்றிலிருந்து கட்சிக்குள் உதயநிதியின் இலாகா அதிகரித்து வருகிறது, முதலமைச்சரின் பல துறைகள், உதயநிதியின் பார்வைக்கு சென்றது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் உதயநிதியும் பங்கேற்று வந்தார். .. வருகிறார்.

இந்த நிலையில்,  ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்கு முன்பே உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்று  அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான்,  தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க செல்ல உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு உடல்நல சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அமைச்சரான  மகன் உதயநிதியை துணைமுதல்வராக முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்-ம் விமர்சனம் செய்திருக்கிறார்.  திமுகவில்,  மூத்த அமைச்சர்கள் இருக்கும்பொழுது ஏன் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், அது அவர்கள் கட்சியின் முடிவு. அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். இதில் கருத்து கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

செல்லும் இடங்களில் எல்லாம் நல்லாட்சி தொடர்கிறது என்று கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு, “நடப்பது நல்லாட்சியாக இருந்தால் நான் ஏன் வியாழக்கிழமை தோறும் ஒன்று, இரண்டு, மூன்று என கோப்புகளை படித்து மேற்கோள் காட்டி வருகிறேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து,  உதயநிதி துணைமுதல்வராகிறார் என்ற தகவல்கள் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே சமீப கால அரசின் நடவடிக்கைகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

உதயநிதி துணைமுதல்வராக பதவி ஏற்க இருப்பதாக வரும் தகவல்  குறித்து எற்கனவே கருத்து தெரிவித்த   பா.ஜ.க-வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “தி.மு.க என்பது கருணாநிதியின் குடும்ப சொத்து. அதில் குடும்பத்தினர் மட்டுமே உயர் பதவிகளுக்கு வரமுடியும். உதயநிதி, துணை முதலமைச்சர் என்பது அதிகாரபூர்வமாகப் பதவி பிரமாணம் மட்டும்தான் செய்யப்படவில்லை. மற்றபடி முதலமைச்சரைவிட அதிகமான அதிகாரம் உதயநிதியிடம்தான் இருக்கிறது. இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி பற்றி பல்வேறு கருத்துகளைக் கூறிவிட்டு, பின்பு அவரே மறுத்தார். உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என்றார், ஆனால் வந்துவிட்டார். உதயநிதி அமைச்சராக மாட்டார் என்றார், ஆனால் ஆகிவிட்டார். அதேபோல் துணை முதலமைச்சர் வதந்தி என்றிருக்கிறார். ஆனால் உறுதியாக உதயநிதியை துணை முதலமைச்சராக அவரே ஆக்குவார்.

எங்களை பொறுத்தவரை ஸ்டாலினின் இந்த மறுப்பு பொய், சங்கடத்தை தவிர்க்கும் தற்காலிக அறிவிப்புதான். தி.மு.க இப்படி ஒரு பேச்சை உருவாக்கி, என்ன எதிர்வினை வருகிறதென பார்த்திருக்கிறது, எப்போதும்போல மறுப்பு தெரிவித்து, பின்பு வழக்கம்போல் மறுத்ததை அறிவிப்பாக தருவார்கள். இதுவெறும் ட்ரெய்லர்தான், செட்டிங்தான். உதயநிதியை துணை முதலமைச்சராக்க மக்களை இப்போதே தயார் படுத்துகிறார்கள்” என்றார்

உதயநிதி கடந்த, 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திரைப்படத் துறையின் மீதான கட்டுப்பாட்டைக் கொண்டு, திரைப்படத் துறையை ஏகபோகமாக்க முயற்சிப்பதாக குற்றச் சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில்,  தற்போதும் அதுபோன்ற குற்றச்சாட்டுக்களை உதயநிதி  குடும்பத்தினர் எதிர்கொண்டுதான் வருகின்றனர். இதனால் பல திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும்,  திமுக ஆட்சியில் திரைக்குப் பின்னால் இருந்து வருபவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ஆதரவு உதயநிதிக்கு இருப்பதால் உதயநிதி விரைவில் துணைமுதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.