டெல்லி: நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட  வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், இன்று  மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ம் தேதி பிற்பகல் வரை காலக்கெடு அளிக்கப்பட்டு உள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முடிவுகளில் சர்ச்சை, ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக, ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா  கொண்ட அமர்வில், இந்த வழக்கு நேற்று   (ஜூலை 18) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா, “இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ-யின் அறிக்கை மனுதாரர்களுக்கு வழங்கப்படவில்லை” என முறையிட்டார்.  அதற்கு பதில் அளித்த சந்திரசூட், “நான் எப்போதுமே வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிபிஐ-யின் அறிக்கை பகிரப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் உஷாராகி விடுவார்கள்” என தெரிவித்தார்.

மேலும், “நீட் கசிவு திட்டமிட்ட ரீதியில் நடந்துள்ளது என்றும், அது முழு தேர்வையும் பாதித்தது என்றும் கூறும் மனுதாரர்கள், அதனை நம்ப வைக்க முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ஆழமான விசாரணை தேவைப்படும் பிரச்சினைகள் எவை என்பதையும் சுட்டிக்காட்டுங்கள் என்று வலியுறுத்தினார்.

அதற்குப் பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா, “100 மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை முதல் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மாணவர்களின் முடிவுகளை வெளியிட வேண்டும். இளநிலை நீட் இடங்கள் 1.08 லட்சம் உள்ளன. நீட் தேர்வு எழுதியவர்களில் 1.08 லட்சம்  மாணவர்களுக்கு  இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள 22 லட்சம் மாணவர்களுக்கு சீட் கிடைக்காது. எனவே, மறுதேர்வு 1.08 லட்சத்தை மட்டுமே பாதிக்கிறது. எனவே, மறு தேர்வுக்கு உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி, “முழு தேர்வுமே தனது புனிதத்தை இழந்துவிட்டது என்றால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்” என தெரிவித்தார்.

அதற்கு மூத்த வழக்கறிஞர் ஹூடா, “முறைகேட்டில் ஈடுபட்டவர்களை, ஈடுபடாதவர்களிடம் இருந்து பிரிக்க முடியாது” என சுட்டிக்காட்டினார். மறுதேர்வு நடத்த உத்தரவிடப் பட்டால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தேசிய தேர்வு முகமையிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அ

தற்கு தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “1,08,000க்குள் இல்லாத 131 மாணவர்கள் மறுதேர்வை விரும்புகிறார்கள். 1,08,000-க்குள் இருக்கும் 254 மாணவர்கள் மறுதேர்வை எதிர்க்கின்றனர். ஒரு லட்சத்து 8 ஆயிரத்துக்குள் இருக்கும் சிலர், அரசாங்க இடங்களை பெற விரும்புவதால் நீதிமன்றத்தின் முன் உள்ளனர்” என்று கூறினார்.

முன்னதாக விசாரணையின்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “நீட் தேர்வு வினா – விடைகளை மே 5-ம் தேதி காலையிலேயே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மே 5ம் தேதிக்கு முன்பாக யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையை தயார் செய்திருக்க வேண்டும். இது உண்மையாக இருந்தால் மே 4ம் தேதி இரவே வினாத்தாள் கசிந்துள்ளது.

இதில் இரண்டு சாத்தியக்கூறுகள் உண்டு. ஒன்றுவினாத்தாள் சேமித்து வைக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டுசெல்லும்போது கசிந்திருக்க வேண்டும்.

எனவே மே 3 – 5ம் தேதிகளுக்குள் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. இதில் சரியாக எப்போது கசிந்திருக்கும் என்பதுதான் தற்போதைய கேள்வி.” என்று தேசிய தேர்வு முகமைக்கு கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்தே, நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட  வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், இன்று  மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ம் தேதி பிற்பகல் வரை காலக்கெடு அளிக்கப்பட்டு உள்ளது.