தெலுங்கானாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரபுல் தேசாய் போலி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக வலைதள பக்கங்களில் வெளியான அவரது படங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரபுல் தேசாயின் இடது கால் போலியோவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரால் நடந்து செல்ல முடியாத வகையில் 45% பாதிக்கப்பட்டுள்ளது என்று பெலகவி மாவட்ட மருத்துவமனை வழங்கிய மருத்துவ சான்று உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் அவர் குதிரையேற்றம் மற்றும் சைக்கிள் சவாரி போன்ற விளையாட்டுகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதனால் மாற்றுத் திறனாளி என்று அவர் வழங்கிய மருத்துவ சான்று போலி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இருந்தபோதும், தனது இடது கால் போலியோவால் பாதிக்கப்பட்ட போதும் தன்னால் நடக்கவோ, சைக்கிள் ஓட்டவோ முடியும் என்றும் தன்னால் ஓட மட்டும் முடியாது என்று பிரபுல் தேசாய் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள தனது படங்கள் அனைத்தும் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட படங்கள் என்று விளக்கமளித்துள்ள பிரபுல் தேசாய் தன்னால் ஒரு சில உடல் பயிற்சிகளில் ஈடுபட முடியும் என்று விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பூஜா க்ஹெட்கர் இதேபோன்று போலி சான்றிதழ் வழங்கியதாக புகார் எழுந்துள்ள நிலையில் பிரபுல் தேசாய் மீதான இந்த புகார் யுபிஎஸ்சி மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வு முறை மீது கேள்வி எழுப்பியுள்ளது.