டில்லி: ”நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது, அதற்கான உத்தரவு பிறப்பிக்க முடியாது   என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக, நீட் தோ்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாள்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளால் வழக்கு நடைபெற்று வருவதால், நீட் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை தாமதமாகி வருகிறது.

 

இந்த ஆண்டு நீட் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ந் தேதி வெளியானது. நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட 6 போ் முழு மதிப்பெண் பெற்றது போன்றவை நாடுமுழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடா்பான நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சுமார் 254 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அனைத்தையும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்களை  உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூடு தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  சிபிஐ சார்பில் நீட் தேர்வு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியை வெளியிட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தினர். இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். நீட் தேர்வு நடத்த தேவையில்லை என மத்தியஅரசு, தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், சென்றதால், நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் கலந்தாய்வு தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ”சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வுக்கு இந்த நீதிமன்றம் முக்கியத்துவம் வழங்குகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இன்றைய வழக்கு விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். நீட் தேர்வில் குளறுபடி புகார் எழுந்துள்ளதால், கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யவும் முடியாது; அனைத்து மாணவர்களுக்கும் மறு தேர்வை எழுத வேண்டும் என உத்தரவிடவும் முடியாது” என்றார்.

நீட்  தேர்வுத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நடந்து வரும் விசாரணை தொடர்பான இரண்டாவது நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளதாக கூறிய நீதிபதிகள்,   இன்று விசாரணை நடந்து வருவதால்,  சிபிஐ எங்களிடம் கூறியது தெரியவந்தால் அது விசாரணையை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ”ஒட்டுமொத்த நபர்களுக்கும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர இருக்கிறார்கள் அவர்களுக்கு மட்டும் மறுத்தேர்வு நடத்தினால் போதும் என்று தான் கேட்கிறோம்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி  சந்திரசூட், ”வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்” எனக் கூறியதுடன், விண்ணப்பதாரர்களின் (மனுதாரர்கள்) வழக்கறிஞரிடம்,  முழு தேர்வையும் ரத்து செய்ய உத்தரவாதம் அளிக்கும் வகையில் வினாத்தாள் கசிவு  முழு தேர்வையும் பாதித்தது என்பதற்கான ஆதாரத்தை  காட்டுமாறு  கோரியது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதாடியபோது,  சென்னை ஐஐடி இயக்குநர், தேசிய தேர்வு முகமையின் உறுப்பினராக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.  இதையடுத்து,  நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை ஐஐடி குழு அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பதாக கூறியதுடன்,   வினாத்தாள் கசிவு, நீட் தேர்வை முழுமையாக பாதித்தது என்பதை நிரூபித்தால் தேர்வை ரத்து செய்யலாம் என கூறியது.

மேலும், நீட் தேர்வு முடிவில், முதல் நூறு தரவரிசைகள் மற்றும் அவர்கள் எந்த நகரங்களில் இருந்து வருகிறார்கள் என்பது குறித்த தகவல்களை தெரிவிக்கும்படி என்டிஏக்கு உச்சநீதி மன்றம் கோரிக்கை வைத்துள்ளது. முழு தேர்வை எழுதிய 23.33 லட்சம் மாணவர்களில் எத்தனை மாணவர்கள் தங்கள் மையத்தை மாற்றியுள்ளனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தேர்வு எழுதிய ஒரு லட்சத்து எட்டாயிரம் பேரில் எத்தனை மாணவர்கள்,   தங்கள் நகரங்களை மாற்றியுள்ளனர் என்பது பற்றிய தரவுகளை NTA விடம் இருந்து அறிய உச்ச நீதிமன்றம் கோருகிறது? சந்தேகத்திற்குரிய பகுதிகளுக்கு மாற்றப்பட்டதா? ஏப்ரல் 9 மற்றும் 10 க்கு இடையில் (புதிய விண்ணப்பங்களுக்கு ஒரு சாளரம் திறக்கப்பட்ட போது) பதிவு செய்தவர்களுக்கு இடையில் ஏதேனும்  முறைகேடுகள் நடந்துள்ளதா? என கோரியது.

அதற்கு பதில் அளித்த என்டிஏ, வழக்கறிஞர்,  திருத்தங்கள் என்ற பெயரில், மாணவர்கள் மையங்களை மாற்றியதாகவும், 15,000 மாணவர்கள் திருத்தங்களுக்காக என்டிஏயை  பயன்படுத்தியதாகவும்  தெரிவித்துள்ளது.

மாணவர்கள் நகரத்தை மட்டுமே மாற்ற முடியும் என்றும், எந்த  மாணவரும், தேர்வு மையத்தை தேர்வு செய்ய முடியாது என்றும் என்டிஏ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வர்களுக்கான மையத்தை என்டிஏதான் ஒதுக்குகிறது என்றும்,  தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் சென்டர் ஒதுக்கீடு செய்யப்படுவதால், எந்த மையம் ஒதுக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து வழக்கின் விசாரணை, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொடரும் என வழக்கை ஒத்தி வைத்தது.

நீட் முறைகேடு: எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரை தூக்கியது சிபிஐ…