சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவைச்சேர்ந்த பெண் வழக்கறிஞரான மலர்கொடி என்பவரை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொலையில், திமுக, அதிமுக, பாஜகவைச் சேர்ந்தவர்களும் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்களான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி (அதிமுக), செம்பியத்தை சேர்ந்த ஹரிகரன், திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் (திமுக நிர்வாகி மகன்) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், மலர்கொடியின் கணவர் பிரபல தாதாவாக வலம் வந்த வர் எனக் கூறப்படுகிறது. இதேபோல் சதீஷ் திமுக நிர்வாகி ஒருவரின் மகன் என்றும் கூறப்படுகிறது. அதுபோல ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவியாக வாழ்ந்த பாஜகவைச் சேர்ந்த அஞ்சலை என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் மலர்கொடியை, கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் ) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.