மும்பை

விமானங்களில் சுமைகளை ஏற்றி இறக்கும் 2200 பணியிடங்களுக்காக 25000 இளைஞர்கள் குவிந்ததால் ஏர் இந்தியா நேர்காணலை ரத்து செய்துள்ளது.

நேற்று ஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிகளின் உடமைகளை விமானங்களில் ஏற்றி, இறக்கும் பணி மற்றும் உணவுகளை விமானங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி உள்ளிட்ட சுமை தூக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

காலியாக ள்ள 2,216 பணியிடங்களுக்கு மும்பை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறவிருந்த நிலையில், சுமார் 25,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் அலுவலகத்துக்கு வெளியே குவியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இவர்களுக்கும் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் மாதம் ரூ.20,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெருமளவிலான பட்டதாரி இளைஞர்களும் நேர்காணலுக்கு விண்ணப்பங்களுடன் வருகை தந்திருந்தனர்.

நேற்று காலை ஏர் இந்தியாவின் மும்பை அலுவலகத்துக்கு வெளியே குவிந்திருந்த சுமார் 25,000-க்கும் அதிகமான இளைஞர்கள் முண்டியடித்து நேர்காணலுக்கு நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் நிலைமை கட்டுப்பாட்டை இழந்ததால் அனைவரையும் விண்ணப்பங்களை மட்டும் கொடுத்துச் செல்லுமாறும், அதிலிருந்து தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைப்பதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்து நேர்காணலை ரத்து செய்துள்ளது.