மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காவிரி ஒழுங்குமுறை ஆணையம் தினசரி ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தராமையும், துணைமுதல்வர் சிவகுமாரும் மறுத்து வருகின்றனர். இதனால், தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தை நாட உள்ளதாக அறிவித்து உள்ளது.
இதற்கிடையில், கர்நாடகாவின் தலைகாவேரி உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி போன்ற அணைகள் நிரம்பி வருகிறது. அதனால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனிடையே, அங்கு அணைகளின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,054 கன அடியாகவும், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 16,577 கன அடியாகவும் உயர்ந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவானது விநாடிக்கு 20,910 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால்அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதற்கிடையில் மேட்டூர் அணையில், காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 43.83 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 46.80 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், நீர் இருப்பு 14.14 டிஎம்சியில் இருந்து 15.85 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அளவுக்கு உயர்ந்தது. நீர் இருப்பு 1.71 டிஎம்சி உயர்ந்தது.