சென்னை: சென்னையில் இரு பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று சம்பந்தப்பட்ட 13 தனியார் பள்ளிகளிலும் சோதனை நடத்தினர். ஆனால், எந்த வெடிபொருட்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து,மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் பெற்றோர் அச்சமடைந்து பள்ளிகளுக்கு விரைந்து, பிள்ளைகளை அழைத்துச் சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதுதொடர்பாக சென்னை மத்தியகுற்றப்பிரிவில் உள்ள சைபர்க்ரைம் போலீஸார் விசாரணையை நடத்தில். அதில், இந்த இமெயில் மிரட்டல் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது. அது சுவிட்சர்லாந்தாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே, தேவை ஏற்பட்டால் குற்றவாளியைக் கைது செய்ய சர்வதேசபோலீஸாரின் உதவியை நாடவோம்என கூறியிருந்தது.
இநத் நிலையில், இன்று (17-7-24) பட்டினம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம், வித்யா மந்திர பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்பநாய் பிரிவினர் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மிரட்டல் விவகாரத்தில் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். பதற்றத்தை உருவாக்கவும் வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.