சென்னை: தமிழ்நாடு அரசு மேற்கு வங்க மாநிலத்தைப் போல, ஆன்லைன் மூலம் ஸ்விக்கி, ஷொமட்டோ மது பாட்டில்களை வீடுகளுக்கு மது டெலிவரி செய்வது குறித்து ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த ஆபத்தான முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என எச்சரித்து உள்ளார்.
ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆன்லைனில் மது விற்பனை துவங்கிவிட்டது, அதற்கான லிங்க் இதுதான் குடிமக்களே என்று ஒரு செய்தி பரவலாக சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், அதுபோலி என தெரிய வந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஆன்லைன் மது விற்பனை தொடர்பாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில், ஆன்லைன் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் சுவிக்கி, ஷொமட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மது பாட்டிகல்களும் டெலிவரி செய்யப்பட்து வருகிறது. இதை பின்பற்றி, தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானங்களை ஆன்லைன் நிறுவனங்கள் அரசு ஒப்புதலுடன் வீடுகளுக்கே சென்று ‘டெலிவரி’ செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா? வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். வீடுகளுக்கே கொண்டு சென்று மதுவை விற்பனை செய்வது என்பது மக்கள் நலனை விரும்பும் அரசுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தீமை ஆகும். ஆனால், தமிழக அரசு அத்தகைய தீமையை செய்யாது என்று உறுதியாக கூற முடியவில்லை
அதற்கு காரணம், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகள், திருமண விழாக்கள் போன்றவற்றில் மதுவகைகளை வினியோகித்தல், மதுக்கடைகளில் காகிதக் குடுவைகளில் குறைந்த விலையில் மது விற்பனை செய்வது போன்ற புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்யத் துடித்த வரலாறு தமிழக அரசுக்கு உண்டு. அதனால் தான் இந்த செய்தியும் உண்மையாக இருக்குமோ? என்று நம்பத் தோன்றுகிறது.
மது, புகையிலை எதுவாக இருந்தாலும் நுகர்வோருக்கு எளிதில் கிடைக்காத வகையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆகும். அதன் மூலம் தான் மது – புகையிலை ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் நம்பிக்கை ஆகும். ஏற்கனவே தெருவுக்குத்தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் தான் மாணவர்கள் மதுவை வாங்கிச் சென்று பள்ளிகளில் வைத்து அருந்தும் கொடுமை நிகழ்கிறது. வீடுகளுக்கே மதுவை நேரடியாக கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது
போதை குறைந்த மது வீடுகளுக்கே நேரடியாக வினியோகிக்கபட்டால், அது வீடுகளில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும் மதுவுக்கு அடிமையாக்கவே இந்த வழக்கம் வழிகோலும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….