கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நிலமோசடி வழக்கில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் நில மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டு வந்தது தெரிய வந்த நிலையில், தற்போது சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரித்விராஜ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் Non Trasable சான்றிதழ் பெறப்பட்டு, அதன் மூலம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பத்திரப்பதிவு செய்துள்ளார். நில உரிமையாளர் பிரகாஷ் புகாரில், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கரூர் சார்-பதிவாளர் விசாரித்தபோது சான்றிதழ் ஏதும் தரவில்லை என தகவல் கூறப்படுகிறது. இதன் பேரில் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கரூர், குப்புச்சிப்பாளையம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரகாஷ். இவர், தோரணக்கல்பட்டியிலுள்ள தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி போலி ஆவணங்கள் கொடுத்து தனது ஆதரவாளர்களின் பெயர்களில் பத்திர பதிவு செய்துவிட்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி புகார் கொடுத்திருந்தார். அதேபோல், மேலக்கரூர் சார்பதிவாளர் ( பொறுப்பு) முகமது அப்துல் காதரும் கரூர் நகர காவல் நிலையத்தில், பிரகாஷ் வழங்கிய புகாரைப் போலவே, போலியாக ஆவணங்கள் கொடுத்து பத்திரப் பதிவு செய்தவர்கள் மீதும், அதனையொட்டி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு ஒன்றை வழங்கினார்.
இதில், சார்பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், பிரவீன், யுவராஜ், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் உள்ளிட்ட ஏழு பேர்மீது எட்டு பிரிவுகளின் கீழ், கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதனிடையே, முதலில் புகார் கொடுத்த பிரகாஷ் வாங்கல் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதால், அவர் கொடுத்த புகார் அடிப்படையில் வாங்கல் காவல் நிலையத்தில் மேற்படி ஏழு நபர்கள் மற்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கு கடந்த 14-ம் தேதி சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்றப்பட்டது. இதையறிந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் தலைமறைவானார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அவர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர். திண்டுக்கல், கேரளா மற்றும் வட மாநிலங்கள் என்று பல இடங்களில் அவர் பதுங்கி இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கெல்லாம் அவரைத் தேடி சி.பி.சி.ஐ.டி போலீஸார் பயணித்தனர். மேலும், கரூரில் உள்ள அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இரண்டு முறை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனை நடத்தினர்.
இன்னொருபக்கம், முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு தாக்கல் செய்த மனு மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தது. இத்தகைய சூழலில், எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தேடி கேரளம் விரைந்த தனிப்படை போலீஸார் கேரள எல்லையில் பதுங்கியிருந்த அவரை கைது கைதுசெய்திருக்கின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கைது நடவடிக்கை கரூர் பகுதிகளில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சுமார் 5மணி நேரம் விசாரண நடைபெற்று வந்த நிலையில், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் திருச்சி மத்திய சிறையில் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டு ள்ளார்.
ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு: தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!