Swiggy, BigBasket மற்றும் Zomato போன்ற டெலிவரி ஆப்-கள் மூலம் விரைவில் பீர், ஒயின் மற்றும் குறைந்த ஆல்கஹால் மதுபானங்களை விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மதுவை ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
அடுத்ததாக, புது தில்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக மதுபான தொழில்துறை நிர்வாகிகளை மேற்கோள் காட்டி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட மது விநியோகத்தை உறுதிசெய்யவும் மற்ற சாதக பாதகங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
“இது குறிப்பாக, பெரிய நகரங்களில் அதிகரித்து வரும் வெளிநாட்டினரின் தேவையை பூர்த்தி செய்யவும், பொழுதுபோக்கிற்காக உணவுடன் குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை குடிக்கும் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மதுக்கடைகள் முன்பு நின்று மது வாங்குவதால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கவும் உதவும்” என்று அவர்கள் கூறினர்.
“ஆன்லைன் மூலம் மதுவங்குவதால் வாடிக்கையாளரின் வயது மற்றும் வரம்பு ஆகியவை உறுதி செய்யப்படுகிறது. தவிர, ஒழுங்குமுறை மற்றும் காலால் விதிகளுடன் ஒத்துப்போகிறது.
அதேபோல், மதுவிற்பனை தடைசெய்யப்பட்ட நாட்கள் மற்றும் நேரம் மற்றும் பகுதிகளை உறுதி செய்கிறது” என்று ஸ்விக்கி நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் மது விநியோகம் கட்டுப்பாடுகளுடன் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது என்றும் ஆன்லைன் டெலிவரியைத் தொடர்ந்து மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மது விற்பனை 20-30% அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக சில்லறை வணிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
“ஆன்லைனில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதன் மூலம், மாநிலங்கள் நுகர்வோர் வசதியை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், பொறுப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட மது விநியோகத்தை உறுதிசெய்யும் அதே வேளையில் உலகளாவிய போக்குகளுடன் ஒத்துப்போகவும் முடியும்” என்று மது விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.