தூத்துக்குடி: கர்நாடக காங்கிரஸ் அரசிடம் இருந்து, காவிரி தண்ணீரை பிரதமர் மோடி பெற்று தர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றி தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை கொடுக்காத கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும், காவிரி மேலாண்மை வாரியமும், மேலாண்மை ஒருங்கிணைப்பு குழுவும் என்ன ஆணையிட்டு இருக்கிறதோ அதனை கர்நாடக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்‘ தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவல் செல்வபெருந்தகை கன்னியாகுமரியில் நடைபெறும் காமராஜர் பிறந்த தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திதபோது, ”காவிரி மேலாண்மை வாரியமும், மேலாண்மை ஒருங்கிணைப்பு குழுவும் என்ன ஆணையிட்டு இருக்கிறதோ அதனை கர்நாடக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்த தவறினால் மத்திய அரசு அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்ற ஆணை, காவிரி மேலாண்மை ஆணைய ஆணை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் என்ற முறையில் தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று கொடுக்க வேண்டும், கர்நாடக அரசை வலையுறுத்தி, அவர்களிடம் இருந்து (கர்நாடகாவிடமிருந்து) தண்ணீரை பெற்று தர வேண்டும் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அரசியல் கொலைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலைகள் பற்றிய விசாரணையில் தமிழ்நாட்டு காவல்துறை மீது உலகம் முழுவதும் நம்பிக்கை இருக்கிறது. ஸ்காட்லாந்துக்கு இணையான காவல்துறையினர் என பெயர் எடுத்தவர்கள். புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. அத குறித்து நான் மீடியாவிடம் தற்போது எதுவும் சொல்ல முடியாது.
ஆம்ஸ்ட்ராங் கொலை விஷயத்தில் தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கு. ஆகவே சிபிஐ விசாரணை தேவையில்லை, அவர்கள் புலன் விசாரணை செய்யட்டும். விசாரணைக்கு குறைந்தபட்ச கால அவகாசம் கொடுக்க வேண்டும். சில வழக்கில் உடனடியாக கண்டுபிடித்து விடுவார்கள். சில வழக்கு பிரச்சனை இருக்கிறது. தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது என்றார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சாவு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், காங்கிரசின் கொள்கை மகாத்மா காந்தியின் கொள்கை கோட்பாடு எல்லாம் பூரண மதுவிலக்கு தான். எந்த ஒரு காங்கிரஸ்காரனும் அது வேண்டாம் என்று சொல்ல மாட்டான். காங்கிரஸ் கட்சி மதுவிலக்கை கண்டிப்பாக வலியுறுத்தும்” என்றார்.