சென்னை: அடிமையாகி போன தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்ன சொல்வது. திமுக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதை யார் கேட்கப் போகிறார்கள் ? என பாமகவின் 36வது ஆண்டு தொடக்க நாளில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி விடுத்துள்ளார்.
மேலும், நியாயவிலைக்கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ள்ளார்.
பாமகவின் 36 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று திண்டிவனம் அடுத்ததைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. 36 ஆம் ஆண்டில் துவக்க நாளை முன்னிட்டு பாமக கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளது. அதில் சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் இந்த மூன்று கொள்கைகளை சமூக ஜனநாயகம் என்கின்ற உன்னதமான கொள்கையின் அடிப்படையிலேயே தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபட்டு வருகின்றோம். தொடர்ந்து பாடுபட போகிறோம்.,
தமிழ்நாட்டு மக்கள் ஏனோ தெரியவில்லை பெரிய அளவிலே ஆதரவு தரவில்லை அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இது போன்று கொள்கை உடைய 35 ஆண்டு காலம் இந்த மக்கள் பிரச்சினைக்காக எந்த பிரச்சனையானாலும் குரல் கொடுக்கும் என்னிடம் தான் வருகின்றார்கள். நான் தான் அதற்காக போராடுகிறேன் அதற்காக அறிக்கை விடுகிறேன். ஆனாலும் மக்கள் என் பின்னாலே முழுவதும் வர மறுக்கிறார்கள், தயங்குகிறார்கள் ஏனோ தெரியவில்லை, ஆனால் எதிர்காலத்திலே தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு மொத்தமாக பாட்டாளி மக்கள் கட்சியின் பின்னால், என் பின்னாலே வருவார்கள் என்று நம்புகிறேன்.
ஒளிமயமான எதிர்காலம் தமிழ்நாட்டுக்கு இருக்கும் என்று நிச்சயமாக தெரிவித்துக்கொள்கிறேன். மின்கட்டண உயர்வு குறித்து வியாழக்கிழமை தோறும் நான் அறிக்கையில் வெளியிட்டு வருகிறேன். நான் ஏற்கனவே தெரிவித்தது தான் தற்போது மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்கள் இதை யார் கேட்கப் போகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களை தேர்தல் நேரத்தில் ஆயிரம், இரண்டாயிரத்திற்கு விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதற்கு மக்கள் என்ன சொல்லப் போகிறார்கள். இதற்கு என்ன செய்யப் போகிறார்கள். இதற்கு தண்டனை கொடுக்கப் போகிறார்களா. எந்த தண்டனையும் கொடுக்கப் போவதில்லை, அந்த தேர்தல் நேரத்தில் கொடுக்கிற டோக்கன், மற்ற இதர சலுகைகளுக்கே அடிமையாகி போன தமிழ்நாட்டு மக்களுக்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னும் எல்லாவற்றையும் உயர்த்துவார்கள் என்ன செய்யப் போகிறோம்.
இந்த மக்களுக்காக எத்தனையோ போராட்டங்கள் செய்து இருக்கிறேன். தேர்தல் நேரத்தில் ஒரு நல்ல கட்சியை ஞானயமான கட்சியை வெகு மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கட்சியை கோட்டைக்கு அனுப்ப தவறுகிறார்கள். அதனால் செய்பவர்கள் செய்து கொண்டே தான் இருப்பார்கள்.
தினமும் மக்களுக்காக ஒரு அறிக்கையை வருடத்தில் ஆயிரக்கணக்கான அறிக்கையை தமிழ்நாடு மக்களுக்காக சமூக நீதி, சமத்துவம்,சகோதரத்துவம், சமூக ஜனநாயகம் என்ற கொள்கையின் மூலம் ஆகியவற்றை பாமக கடைப்பிடித்து வருகிறது.
60 நாடுகளில் சமூக ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையே பாமக கொள்கையாக பின்பற்றி வரும் நிலையில் இதற்கு அனைத்து ஊடகங்களின் ஆதரவு எனக்கு தேவை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறினார்.
மேலும், நியாயவிலைக்கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்தக் கூடாது: ஏழைகள் வயிற்றில் மீண்டும், மீண்டும் அடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ஒரு தரப்பினருக்கு நிறுத்தவும், மீதமுள்ளவர்களுக்கு விலையை உயர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மூன்றாவது முறையாக மின்கட்டண உயர்வு என்ற இடியை ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது இறக்கியுள்ள தமிழக அரசு, துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவதையும் நிறுத்தி ஏழைகளின் வயிற்றில் மீண்டும், மீண்டும் அடிக்கக் கூடாது.
2007-ஆம் ஆண்டில் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்ட போது, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஓரளவாவது போக்கும் நோக்கத்துடன் பருப்பு, பாமாயில், மளிகை சாமான்கள் வழங்கும் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த உளுந்து, மளிகை சாமான்கள் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் நிறுத்த தமிழக அரசு முயற்சிப்பது அநீதியாகும். பாமாயில், துவரம்பருப்பு வழங்கும் திட்டத்திற்கான மானியச் செலவு அதிகரித்து விட்டதால், அத்திட்டத்தை கைவிடும்படி நிதித்துறை கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பருப்பு , பாமாயில் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தவும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் விவகாரத்தில் அரசின் முடிவைத் தான் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். அதிகாரிகளின் யோசனைகளை அரசு ஏற்கக் கூடாது. அதிகாரிகளின் யோசனைகளுக்கு கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் செவி சாய்த்திருந்தால் ஓமந்தூரார் ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காது; அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் அது நீட்டிக்கப்பட்டிருக்காது. காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டமும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவுத் திட்டமும் நடை முறைப்படுத்தப்பட்டிருக்காது.
சிறப்புப் பொதுவினியோகத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது தான் மக்கள் நல அரசுக்கு அழகாக இருக்குமே தவிர, குறுக்குவது சரியாக இருக்காது.
2021-ஆம் ஆண்டில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உளுந்து வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதை செயல்படுத்தாமல் இருக்கும் திட்டத்தையும் சீர்குலைக்க முயல்வது அழகல்ல. மக்களின் குறைகளை அறிந்து அவற்றை போக்குவது தான் அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே தொடர வேண்டும்.
ஏற்கனவே வாக்குறுதி அளித்தவாறு உளுந்து வழங்கும் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.