சென்னை: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை தனிப்படை காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின்பேரில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, இந்த நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் உயர்நீதிமன்றத்திலும் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிலுவையில் உள்ளது. இதையடுத்து விஜயபாஸ்கடர் திடீரென தலைமறைவானார்.
இதற்கிடையில், சிபிசிஐடி காவல்துறையினர், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதை அடுத்து அவரை தனிப்படை அமைத்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கேரளாவில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி போலீசார் அங்கு சென்று அம்மாநில போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளனர். இன்று மாலை அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.