டெல்லி
நான்கு நியமன எம் பிக்கள் பதவிக்காலம் நிறைவடைவதால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைந்துள்ளது.
நேற்றுடன் மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களான ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனல் மன்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய 4 பேரின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இவர்கள் நால்வரும் ஓய்வு பெற்றதையடுத்து, மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 86 ஆக குறைந்துள்ளது.அதே நேரம் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101 ஆக உள்ளது.
தற்போது மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். இதில் 20 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன., பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அந்த எண்ணிக்கை இல்லை. ஆகவே, மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற, முன்னாள் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளை அரசு நம்பி உள்ளது.
தற்போது மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியின் பலம் 87 ஆக உள்ளது. இதில் காங்கிரசுக்கு 26 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 13 உறுப்பினர்களும் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி, தி.மு.க. தலா 10 உறுப்பினர்களை கொண்டுள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜ.க.வுக்கு கூடுதலாக 9 உறுப்பினர்கள் கிடைக்கலாம்.
நியமன எம்.பி.க்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு அளித்தால் பா.ஜ.க. கூட்டணி மெஜாரிட்டியை தாண்டிவிடும். ஆனால் ஜம்மு காஷ்மீர், தெலுங்கானாவில் தேர்தல் நடத்தும்போது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்பதால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.