சென்னை: பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீதான குண்டர் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சவுக்கு சங்கர்  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா? அவதூறு வழக்குக்கு குண்டர் சட்டமா? என கேள்வி எழுப்பி உள்ளது.

பிரபல ஊடகவியலாளர்  மற்றும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாக கோவை போலீசார் வழக்குப் போட்டு அவரை கடந்த 04.05.2024 அன்று தேனியில் கைது செய்தனர். பின்னர், அவர் தனது வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்து தமிழ்நாடு அரசு அவரை கைது செய்ததுடன், குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது. மொத்தம் 7 வழக்குகள் பதியப்பட்டு சவுக்கு சங்கரை காவல்துறை கைது செய்துள்ளது.

மேலும், கஞ்சா வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு, சென்னை தியாகராய நகரில் இருந்த அலுவலகம் ஆகிய இடங்களில் காவல்துறை சோதனை நடத்தியது.

இந்த நிலையில், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனு மீது இன்று  விசாரணை நடைபெற்றது.  அப்போது,  சவுக்கு சங்கர்  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா? என தமிழ்நாடு அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது. மேலும், , தடுப்பு காவலில் ஒருவரை வைப்பது மிக தீவிரமான விஷயம் என்றதுடன், யூ டியூபர் சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாததுதான்.. அதேநேரத்தில் அவருக்கு இடைக்கால பாதுகாப்பு ஏன் வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, . இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும்  18-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.