திருச்சி: ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியை என்கவுண்டர் செய்துள்ளதன் மூலம், 62 ரூபாய் குண்டில் அவரது கொலை வழக்கை திமுக அரசு முடித்து விட்டது என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்பான வீடியோ வெளியிட்டும், அவரை என்கவுண்டர் செய்து, தமிழக அரசு தொடர்ந்து உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
திருச்சி தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்றால் முதலில் அரசியல் மாற்றம் நடக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தோராயமாக 500 நாட்கள் தான் இருக்கிறது. அந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் அது கிடைக்குமா என்பது தெரியாது. எனவே, 500 நாட்களையும் சரியாக பயன்படுத்த வேண்டும். 38 வயதுக்கு கீழே 40 விழுக்காடு வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கெளுக்கெல்லாம் காமராஜர் குறித்து கூறவே இந்த கூட்டம்.
காமராஜர் குறித்து எவ்வளவு பேசினாலும் நாம் நினைக்கும் அரசியல் மாற்றம் கனவாக தான் இருக்கிறது. அதனால் தான் வரும் 500 நாட்கள் நமக்கு வேள்வியாக இருக்கும். 37,000 அரசுப் பள்ளிகளில் 4,500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. 19,260 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இன்று இருக்கும் நிலையில் 2029ல் பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு தமிழகம் சென்று விடும். காமராஜர் தலைவராக இருந்த இடத்தில் இன்று யார் இருக்கிறார்கள் என்பது குறித்து கடந்த 10 நாட்களாக நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
1967-ல் ஆறு கட்சிகளை இணைத்து காமராஜரை திமுக தோல்வி அடையச் செய்தது. இன்று அதே போல மோடியை வீழ்த்த வேண்டும் என இந்தியா கூட்டணி அமைத்தார்கள். காமராஜருக்கு இணையாக திமுக ஒரு போதும் ஆகாது. தமிழ்நாட்டில் 2050ஆம் ஆண்டில் 36 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் தான் கிடைக்கும் என்பது நிதி ஆயோக் அறிக்கையாக கொடுத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் இந்த நிலையில் உள்ளது.
காமராஜர் ஆட்சியில் 70 லட்சம் ஹெக்டரில் விவசாயம் நடந்தது. ஆனால், இன்று 40 லட்சம் ஹெக்டரில் தான் விவசாயம் நடக்கும். தமிழ்நாட்டு மக்கள் ஒரே ஒரு நிமிடம் சிந்தித்து இருந்தால் ஈரோட்டில் விஜயகுமாரும், விக்கிரவாண்டியில் அன்புமணியும் வெற்றி பெற்று இருப்பார்கள். 23 அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து பெண்களை பட்டியில் அடைத்தார்கள். கல்வி, நீர் மேலாண்மை, சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்குச் சென்று கொண்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை 62 ரூபாய் குண்டில் என்கவுண்டர் செய்து முடித்து விட்டார்கள். தமிழ்நாடு அரசால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால், பழியை தூக்கி மத்திய அரசு மீது போடுவார்கள். பிரதமர் விவசாயிகளுக்கு கொடுக்கும் நிதி உதவித் திட்டத்தில் 2019 முதல் 2021 வரை 43 லட்சம் விவசாயிகள் இருந்தார்கள். ஆனால், இன்று 21 லட்சம் பேர் தான் உள்ளார்கள். மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
இந்த விழா நாம் சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக உள்ளது. 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ளார்கள். அவர்கள் யாரையும் டி.ஆர்.பாலு பேச அனுமதிக்க மாட்டார். டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் மட்டும் தான் பேசுவார்கள். இந்தியாவின் மோசமான அரசியல் இருப்பது தமிழ்நாட்டில் தான். உத்தரப் பிரதேசம், பீகாரில் மக்கள் 50 ரூபாய் கூட வாக்களிக்க பணம் வாங்க மாட்டார்கள். அங்கு வேட்பாளர் செய்யும் தேர்தல் செலவே ரூ.10 லட்சம் தான் ஆகும்.
தமிழக மக்கள் ஒரு நிமிடம் சிந்தித்தால் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வரும். மக்களை சிந்திக்க விடாமல் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள். நாம் ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்க வைக்க வேண்டும். ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் நாம் கூட்டணியில் விட்டுக்கொடுக்க வேண்டும்.
ஒரே உயிராக ஒரே மூச்சாக இருக்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு இது போல் ஒரு கூட்டணி அமைந்தது கிடையாது. 2026-ல் ஆட்சி அமைந்தால் எல்லோருக்கும் அதிகாரத்திற்கு வர வாய்ப்பு இருக்கும். அப்போது எந்த தவறும் நடக்காது. எந்த காரணத்தாலும் நம் கூட்டணியில் பிளவோ, மனக்கசப்போ வந்து விடக்கூடாது. அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் நாம் தான் கொடுக்க முடியும்” என்றார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ள தமிழக அரசு தொடர்ந்து உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பாஜக அரசியல் கொலையாக கருதுகிறது. இந்த கொலை சம்பவத்தில் பெரிய மர்ம முடிச்சு உள்ளது. முக்கிய குற்றவாளியை என்கவுண்டர் செய்துவிட்டு அவர்தான் திட்டம் தீட்டியதாக தெரிவிப்பார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினரும் சிக்கி உள்ளனர். இதனால் உண்மையை மூடி மறைக்க போலீசார் முயற்சி செய்கின்றனர். வழக்கை அவசர கதியில் முடிக்க காரணம் என்ன? ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் தொடர்பாக பல கேள்விகள் எழுகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கடிதம் எழுதி இருக்கிறேன். அதன் அடிப்படையில், தமிழக உள்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக இப்போது தான் என்கவுண்டர் செய்யும் நிலையில், எதிராளி துப்பாக்கியால் சுட முயன்றதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். சரணடைந்தவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது கேள்வியாக உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தெளிவான விளக்கங்களைக் கொடுத்து விட்டால், சென்னை அரசியலின் நிலை மாறி ஜனநாயக அரசியல் வந்து விடும். ரவுடிகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இது போன்ற கொடூர கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.
காவிரி பிரச்னை: தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை. அதை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி போராட்டம் நடத்தப்படுகிறது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு, பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் ஒரு சுற்று கூட பாக்கி இல்லாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. மேகதாதுவில் அணை பிரச்னை கிளம்பிய பிறகுதான் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
காவிரி தண்ணீர் கிடைக்காமல் கடந்த ஆண்டு தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரியான விளைச்சல் இல்லாததால் மத்திய உணவு கழகம் அரிசி கொள்முதலை குறைத்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிறது. தமிழக அரசோ, முதல்வரோ, காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களோ கர்நாடகாவுக்குச் சென்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசவில்லை.
அடிப்படை முயற்சிகளையும் செய்யாமல் சதி நடப்பதாக, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழக முதல்வர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இருந்தாலும் அதை ஜனநாயக முறைப்படி தீர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் தெளிவாக இருக்கிறார். இதை தமிழக அரசு புரிந்து கொள்ளாத வரை ஒன்றும் செய்ய முடியாது”
இவ்வாறு அவர் கூறினார்.