விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்  திமுக வேட்பாளர் சிவா சுமார் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  வெற்றி பெற்று சாதனை படைத்தார். திமுக வேட்பாளரின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, உடல்நலக்குறைவால் ஏப். 6 ஆம் தேதி காலமானார்.இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது. அதையடுத்து,  விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். எடப்பாடி பழனிசாமியின் தொடர் தோல்வி பயத்தால் இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. நாதக சார்பில் டாக்டர் அபிநயா என்பவர் போட்டியிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலையில் எண்ணப்பட்டு வந்தது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றார். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டது. அதிலும் திமுக வேட்பாளரே முன்னிலை பெற்று  வந்தார்.

இந்த  நிலையில் இருபதாவது சுற்று முடிவில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி 56,589 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். அதேபோல் நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார்.

தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் பெற்று, 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.