சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது பெயரில் ரூ.100 சிறப்பு நாணயம் வெளியிடப்பட உள்ளது. இதற்கு மத்தியஅரசு ஏற்கனவே அனுமதி வழங்கிய நிலையில், தற்போது அதுதொடர்பான ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

திமுக தலைவரும்,  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான  கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ள நிலையில், அவரது பெயரில் சிறப்பு நாணயம் வெளியிட திமுக தலைமையும், தமிழ்நாடு அரசும் மத்தியஅரசுக்கு கோரிக்கை வைத்தது. அதாவது,   ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப் பட்டது.அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட நிலையில், இந்த நாணயத்தை கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளான  கடந்த ஜூன் 3-ல் வெளியிட திமுக  திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,  நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு காரணமாக, அதுதொடர்பான அறிவிப்பு மற்றும் நாணயம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில்,  மத்தியில் மீண்டும் மோடி அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், நிதி அமைச்சராக நிர்மலா சீத்தாராமனே மீண்டும் தொடர்கிறார். அவரிடம் கலைஞர் நாணம் குறித்து நினைவூட்டப்பட்டது. இதையடுத்து, அந்த நாணயத்திற்கான அனுமதி கோப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்தவாரம்  கையொப்பம் இட்டதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து அதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  முன்னாள் முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாணையத்தின் ஒரு புறம் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024’ என அச்சிடப்பட்டும். மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என நாணயத்தின் மதிப்பும் குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.