கவுகாத்தி: வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க அசாம் அரசு ஊழியர்களுக்கு 2 நாள் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையை அறிவித்திருப்பது அசாம் மாநில அரசு. இது அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெற்றோர் மற்றும் மாமியார்களுடன் நேரத்தை செலவிட பணியாளர்களுக்கு 2 நாள் விடுமுறை அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது.  அரசு தனது பணியாளர்கள் தங்கள் பெற்றோர் அல்லது மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்காக நவம்பர் மாதம் இரண்டு நாள் சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விடுமுறைகளை தனிப்பட்ட இன்பத்திற்காகப் பயன்படுத்த முடியாது, பெற்றோர் அல்லது மாமியார் இல்லாதவர்கள் இந்த விடுமுறையைப் பெறத் தகுதியற்றவர்கள் என்று அசாம்  முதல்வர்  ஹிமந்த பிஸ்வா சர்மா  தெரிவித்துள்ளார்.

பாரம்பரியம் மிக்க இந்தியாவில் சமீப காலமாக பெற்றோர்களை பிள்ளைகள் நிராயுதபாணிகளாக விடுவது அதிகரித்து வருகிறது. இதனால் வசதி வாய்ப்புகள் உள்ள  பல பெற்றோர்கள் முதியோர் இல்லங்களிலும், வசதியற்ற பெற்றோர்கள்  சாலையோரங்களிலும் தங்களது இறுதிக்காலத்தை கழிக்கும் அவலம் அதிகரித்து வருகிறது.

மனிதன் சந்திக்கும் பல்வேறு உறவுகளில் மிகமிக முக்கியமான உறவு பெற்றொர் என்ற உறவு தான். அந்த பெற்றோர்களை மதிக்க, பேணவே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. ஆனால், இன்றைய நவீன யுகத்தில் பெரும்பானோர் கடைபிடிப்பதில்லை.  உலகம் நவீனமயமாக்கலை நோக்கி முன்னேறும்போது, ​​ அதை நோக்கியே இன்றைய தலைமுறையினர் ஓடுவதால், அவர்களை வளர்த்த பெற்றோர் புறக்கணிக்கப்படுகின்றனர். இதனால்  முதியோர்கள்  தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள தனித்து விடப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதனால், அவர்களின் கடைசி காலத்தை கழிக்க,   முதியோர் இல்லங்களை நாடுகின்றனர். இதனால் இந்தியா உள்பட  பல நாடுகளில்  முதியோர் இல்லங்கள்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் பெற்றோர்களின் அருகில் இருந்து கவனித்துக்கொள்ளும் வகையில் இரண்டு நாள் விடுமுறை அசாம் மாநில முதல்வர், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா  அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது அலுவலக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  தங்கள் பெற்றோர் மற்றும் தனது வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக, மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். அதேநேரம், இந்த விடுப்பை வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்கவும், அவர்களை கவனித்துக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக தனிப்பட்ட கொண்டாட்டத்துக்காக பயன்படுத்தக் கூடாது. வரும் நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இதற்கு நடுவே, 7-ம் தேதி சத் பூஜை, 9-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக 5 நாட்கள் பெற்றோருடன் செலவிட வேண்டும்.

அத்தியாவசிய சேவை துறைகளைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் வேறு நாட்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். பெற்றோர் இல்லாதவர்கள் இந்த விடுமுறையை அனுபவிக்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.